டிரைவரை தாக்கிவிட்டு காரை கடத்திய 3 வாலிபர்கள் சிக்கினர்

டிரைவரை தாக்கிவிட்டு காரை கடத்திச்சென்ற 3 வாலிபர்கள் போலீசாரிடம் சிக்கினர்.

Update: 2017-10-15 23:00 GMT
குஜிலியம்பாறை,

கோவை மாவட்டம் கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 40). இவர் அதே பகுதியில் வாடகை கார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள வெள்ளாரை கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன் சதீஷ்குமார் (32) என்பவர் டிரைவராக உள்ளார். சம்பவத்தன்று இவருடைய செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது.

அதில் பேசிய நபர், தான் கோவையில் இருந்து திருச்சிக்கு செல்ல வேண்டும் என்றும் அதற்கு வாடகைக்கு கார் வேண்டும் என்றும் கேட்டுள்ளார். இதை உண்மை என நம்பிய சதீஷ்குமார் அவர் குறிப்பிட்ட இடத்துக்கு காருடன் சென்றார். அப்போது காரில் 3 வாலிபர்கள் ஏறினர். இதையடுத்து திருச்சி நோக்கி கார் புறப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே திருக்கூர்ணம் பகுதியில் சென்ற போது சாலையோரத்தில் காரை நிறுத்தும்படி வாலிபர்களில் ஒருவர் கூறினார்.

இதையடுத்து சாலையோரத்தில் டிரைவர் காரை நிறுத்தினார். அப்போது 3 பேரும் சேர்ந்து சதீஷ்குமாரை தாக்கி கீழே தள்ளிவிட்டு காரை கடத்தி சென்றனர். பின்னர் இது குறித்து ஜெகதீசுக்கு டிரைவர் தகவல் தெரிவித்தார். அவர், குஜிலியம்பாறை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிரைவரை தாக்கிவிட்டு காரை கடத்திச்சென்றவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று குஜிலியம்பாறை அருகே உள்ள பாளையம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி விசாரித்தனர். அதில், காரில் வந்தவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் கரிசல் குளத்தை சேர்ந்த பழனிநாதன் (28), முனீஸ்வரன் (26), திருச்சியை சேர்ந்த சரவணக்குமார் (33) என்பதும், அவர்கள் வந்த கார் ஜெகதீசுக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது. மேலும் டிரைவரை தாக்கிவிட்டு காரை கடத்திச்சென்றதும் அவர்கள் தான் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் காரையும் பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்