திருச்செந்தூரில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் சோதனை

திருச்செந்தூரில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் சோதனை

Update: 2017-10-15 22:45 GMT
திருச்செந்தூர்,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் உத்தரவின்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தங்கவிக்னேஷ் ஆலோசனையின்படி திருச்செந்தூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் பொன்முத்து ஞானசேகர் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் உள்ள டீக்கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகளில் சோதனை நடத்தினர். அப்போது சுகாதாரமற்ற முறையில் தயாரித்து விற்பனை செய்த இனிப்பு வகைகள், காரவகைகள் என மொத்தம் 20 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் காலாவதியான குளிர்பானங்கள், சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட வடைகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. அதன் மொத்த மதிப்பு ரூ.15 ஆயிரம் ஆகும். உணவு பொருட்களை சுகாதாரமற்ற முறையில் தயாரித்து விற்பனை செய்த கடைகளுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தரசட்டப்படி நோட்டீசு வினியோகிக்கப்பட்டது.

பின்னர் காமராஜர் சாலை, கோவில் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டன. அப்போது கடைகளுக்கு உரிமம் பெறாதவர்களுக்கும், கழிவு பொருட்களை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தாத 10 கடைகளுக்கும் நோட்டீசு கொடுக்கப்பட்டது. இந்த சோதனையின்போது வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மாரியப்பன் (ஆழ்வார்திருநகரி), கணேஷ்குமார் (உடன்குடி), காயல்பட்டினம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் குருசாமி ஆகியோர் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்