சந்தன மரங்களை வெட்டி கடத்த முயன்ற 2 பேர் கைது 4 பேருக்கு வலைவீச்சு

ஆரியங்காவு வனப்பகுதியில் சந்தன மரங்களை வெட்டி கடத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-10-15 23:15 GMT
தென்காசி,

கேரள மாநிலம் ஆரியங்காவு வனப்பகுதியில் சிலர் சந்தன மரங்களை வெட்டி கடத்துவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. வனச்சரகர் ஜமாலுதீன் மற்றும் வனத்துறையினர் ஆரியங்காவு வனப்பகுதியான கடமன்பாறை பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது, அங்கு 6 பேர் சந்தன மரத்தை வெட்டி கட்டிக் கொண்டு இருந்தனர். வனத்துறையினர் வருவதை பார்த்த 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். மற்ற 2 பேர் வனத்துறையினரிடம் பிடிபட்டனர். பிடிபட்ட 2 பேரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தினார்கள்.

அவர்கள் நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள ஊர்மேலழகியான் இந்திரா காலனியை சேர்ந்த தங்கதுரை (வயது 37), புளியங்குடி இந்திரா காலனியை சேர்ந்த நாராயணன் (29) என்பதும் தெரிய வந்தது. அவர்களை வனத்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த சந்தன கட்டைகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.5 லட்சம் என்று கூறப்படுகிறது. மேலும் சந்தன மரங்களை வெட்டி கடத்த முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

தப்பி ஓடியவர்கள் கடையநல்லூரை சேர்ந்த வசந்தகுமார், செங்கோட்டை அருகே உள்ள கற்குடியை சேர்ந்த இசக்கிதுரை, கோட்டூர்சாமி, புளியங்குடியை சேர்ந்த தவிடன் ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்கள் 4 பேரையும் வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 2 பேரும் புனலூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்