எரிந்த நிலையில் வாலிபர் பிணம்: குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்தோம்

எரிந்த நிலையில் வாலிபர் பிணமாக கிடந்த வழக்கில் கைதான 2 பேர் ‘குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கழுத்தை நெரித்து கொலை செய்தோம்‘ என்று போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Update: 2017-10-15 22:45 GMT
சூலூர்,

கோவை சூலூரை அடுத்த காங்கேயம்பாளையம் சாவடித்தோட்ட அணை அருகே முள்ளு காட்டில் கடந்த 13-ந் தேதி பாதி எரிந்த நிலையில் 21 மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் சூலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பிணத்தை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், பிணமாக கிடந்தது கிணத்துக்கடவு சென்றாம்பாளையத்தை சேர்ந்த அருள்ராஜ் (வயது 21) என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சம்பவத்தன்று அவருடன் இருந்ததாக கூறப்பட்ட பாண்டி (60) என்பவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் வழக்கு தொடர்பாக நேற்று காலை முத்துபாண்டி (22), பாண்டி ஆகியோர் சூலூர் போலீசில் சரணடைந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். 2 பேரும் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

நாங்கள் 3 பேரும் (அருள்ராஜ் உள்பட) ஒன்றாக ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தோம். கடந்த 13-ந் தேதி குடிபோதையில் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே நாங்கள் 2 பேரும் சேர்ந்து, அருள்ராஜை கைகளால் தாக்கினோம். அதில் அவர் மயக்கமடைந்தார். பின்னர் துண்டால் கழுத்தை இறுக்கி அவரை கொலை செய்தோம்.

பின்னர் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக உடலை தீ வைத்து எரித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டோம். பாண்டியை போலீசார் பிடித்து விசாரித்ததால், பயந்து போன நாங்கள் சரணடைந்துவிட்டோம்.

இவ்வாறு அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்