பாடகர் அங்கித் திவாரி உள்பட 4 பேர் மீது ரூ.30 லட்சம் மோசடி புகார் அமெரிக்க நிறுவனம் கொடுத்தது

பாடகர் அங்கித் திவாரி உள்பட 4 பேர் மீது அமெரிக்க நிறுவனம் ஒன்று ரூ.30 லட்சம் மோசடி புகார் கொடுத்து உள்ளது.

Update: 2017-10-15 22:00 GMT

மும்பை,

அமெரிக்காவை சேர்ந்த ஒரு பொழுதுபோக்கு நிறுவனம் இசை உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் மும்பையை சேர்ந்த இந்தி திரைப்பட பின்னணி பாடகர் அங்கித் திவாரி, பாடகி அக்ரித் காக்கர் ஆகியோரை கொண்டு ஒரு இசை நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு இருந்தது இதற்கு இருவரும் சம்மதம் தெரிவித்தனர்.

இதற்காக அமெரிக்க நிறுவனம் அங்கித் திவாரி, அவரது சகோதரர் அன்குர் திவாரி, அக்ரித் காக்கர், ஷில்பா ராவ் ஆகிய 4 பேரிடம் ரூ.30 லட்சம் முன்பணம் கொடுத்ததாக தெரிகிறது.

பின்னர் அந்த நிறுவனத்தின் மேலாளர் மும்பை வந்து அவர்களை சந்தித்து பேசியபோது, அவர்கள் இசை நிகழ்ச்சியில் பங்கேற்பது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக 2 ஆண்டுகளாக அந்த நிகழ்ச்சியை நடத்த முடியவில்லை. இதையடுத்து பாடகர் அங்கித் திவாரி உள்பட 4 பேர் மீதும் அந்த நிறுவனத்தின் மேலாளர் தீப்குமார் வோரா என்பவர் ஒஷிவாரா போலீசில் பணமோசடி புகார் கொடுத்து உள்ளார்.

இந்த புகாரின்பேரில் போலீசார் 4 பேரையும் விசாரணைக்கு வரும்படி சம்மன் அனுப்பி உள்ளனர்.

மேலும் செய்திகள்