விளையாட்டு வீரர்களுக்கு எல்லைக் காவல் படையில் வேலை

எல்லைக் காவல் படையில் கான்ஸ்டபிள் பணிகளுக்கு 196 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 10-ம் வகுப்பு படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

Update: 2017-10-16 07:14 GMT
ல்லைக் காவல் படை சுருக்கமாக பி.எஸ்.எப். என அழைக்கப்படுகிறது. உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் துணை ராணுவ அமைப்புகளில் ஒன்று இது. தற்போது இந்த படைப்பிரிவில் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விளையாட்டு வீரர்களை நியமிக்கும் சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 196 பணியிடங்கள் உள்ளன. இதில் பெண்களுக்கு 61 இடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. வில்வித்தை, நீர் விளையாட்டுகள், தடகளம், கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து, ஆக்கி, ஜூடோ, கபடி, துப்பாக்கிச் சுடுதல், டேக் வாண்டோ, பளுதூக்குதல், மல்யுத்தம் போன்ற விளையாட்டு பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் வருமாறு...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 18 முதல் 23 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். 1-8-2017-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும்.

கல்வித்தகுதி:

மெட்ரிகுலேசன் அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இவர்கள் தேசிய அளவில் அல்லது சர்வதேச அளவில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள விளையாட்டுகளில் பங்கேற்று குறிப்பிட்ட சாதனைகள் செய்தவர்களாக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

உடல்கூறு அளவு தேர்வு, உடல் திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல், எழுத்துத் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணியில் சேர்க்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். அத்துடன் தேவையான சான்றுகள் இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பம் Commandant, 32 BN BSF, Hisar, Post Office &1 RSA Road, District Hisar, Haryana 125011 என்ற முகவரிக்கு அறிவிப்பில் இருந்து 30 நாட்களுக்குள் சென்றடைய வேண்டும். இதற்கான விளம்பர அறிவிப்பு செப்டம்பர்30- அக்டோபர் 6 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் வெளியாகி உள்ளது.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை அறிந்து கொள்ளவும் அந்த இதழைப் பார்க்கலாம். 

மேலும் செய்திகள்