பொதுமக்களுக்கு சுதந்திரம் இல்லையா? பிரதமருக்கு சிவசேனா கேள்வி

சமூக வலைதளங்களில் பா.ஜனதாவுக்கு எதிராக விமர்சனம் செய்ய பொதுமக்களுக்கு சுதந்திரம் இல்லையா? என்பதை பிரதமர் மோடி விளக்குமாறு சிவசேனா கேள்வி எழுப்பியது.

Update: 2017-10-16 23:15 GMT

மும்பை,

மராட்டிய அரசின் செயல்பாடுகளை விமர்சித்து சமூக வலைதளங்களில் கருத்து பதிவு செய்த சுமார் 35 பேர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன், விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த பிரச்சினையை மேற்கோள்காட்டி, நேற்று சிவசேனா பத்திரிகையான ‘சாம்னா’வில் தலையங்கம் வெளியானது. அதில், கூறி இருப்பதாவது:–

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முதல்–மந்திரிகளை அவமதிக்காமல், பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்பதே பாரதீய ஜனதாவின் நிலைப்பாடு. அதே வேளையில், மன்மோகன்சிங் பிரதமராக இருந்த சமயத்தில், அமைதிக்கான இந்த அழைப்பும், நல்ல நடத்தையும் எங்கே சென்றது?.

வேறு யாருக்கோ வெட்டிய குழியில், இப்போது பா.ஜனதாவே விழுகிறது. எதிர்க்கட்சியை வீழ்த்த பா.ஜனதாவால் பயன்படுத்தப்பட்ட அதே சமூக வலைதளம், தற்போது அக்கட்சியின் முகமூடியை கிழிக்க ஆரம்பித்து விட்டது.

பா.ஜனதா அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் போலியானவை என்பதை அறிந்ததும், இளைஞர்கள் சமூக வலைதளத்தில் பா.ஜனதாவை கேலி செய்கிறார்கள். இந்த விமர்சனங்களை பார்க்கும்போது, பா.ஜனதாவுக்கு சகிப்பின்மையும், வெறுப்பும் ஏற்படுகிறது.

அரசுக்கு எதிராகவும், பா.ஜனதாவுக்கு எதிராகவும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்க சுதந்திரம் இருக்கிறதா, இல்லையா? என்பதை பிரதமரே தெளிவுபடுத்தட்டும்.

இவ்வாறு அதில் சிவசேனா தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்