காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எம்.எல்.ஏ. உறுதி

வால்பாறையில் காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்டேட் தொழிலாளர்களிடம் கஸ்தூரிவாசு எம்.எல்.ஏ. உறுதி அளித்தார்.

Update: 2017-10-16 22:30 GMT
வால்பாறை,

வால்பாறை அருகே உள்ள பன்னிமேடு எஸ்டேட் பங்களா டிவிசன் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டுயானைகள் வீடுகளின் கதவு, ஜன்னல்களை உடைத்தன. பின்னர் வீட்டுக்குள் இருந்த பொருட்கள் முழுவதையும் எடுத்து வெளியே வீசி எறிந்து சேதப்படுத்தின. அதன்பிறகு தொழிலாளர்களும், வனத்துறையினர் பட்டாசு வெடித்து அந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

இந்த நிலையில் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டதை அறிந்த வால்பாறை எம்.எல்.ஏ. கஸ்தூரிவாசு பன்னிமேடு பங்களா டிவிசன் பகுதிக்கு நேரில் சென்றார்.

அங்கு பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். வீடுகளில் சேதமடைந்த பொருட்களுக்கு வனத்துறை மூலம் உரிய நிவாரணம் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்க வனத்துறையினர் மூலம் இரவு நேரங்களில் உரிய பாதுகாப்புகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் உறுதி கூறினார்.

அகழி வெட்டி தர கோரிக்கை

அப்போது தொழிலாளர்கள், தங்கள் குடியிருப்புகளை சுற்றி அகழி வெட்டி தரவேண்டும் என்றும் கூடுதல் வனத்துறையினரை பணியில் அமர்த்தி பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எம்.எல்.ஏ.விடம் கேட்டுக்கொண்டனர். இந்த நிலையில் மானாம்பள்ளி வனச்சரகர் சேகர் தலைமையில் வனத்துறையினர் கூடுதல் வேட்டைத்தடுப்பு காவலர்களுடன் அந்த பகுதியில் ரோந்துப் பணி மேற்கொண்டு யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

முன்னதாக வால்பாறை வந்த எம்.எல்.ஏ. கஸ்தூரிவாசு பழைய பஸ்நிலையம் அருகே மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாமை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கினார்.

நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நகர செயலாளர் மயில்கணேசன்,துணை நகர செயலாளர் பொன்கணேசன்,ஜெயலலிதா பேரவை செயலாளர் நரசப்பன், தலைவர் பாபுஜி ,தொழிற்சங்க தலைவர் சண்முகம், வக்கீல் பெருமாள் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்