சேலையால் வயிற்றில் கட்டிக்கொண்டு குழந்தையுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை

சேலத்தில் குடும்பத்தகராறில் சேலையால் வயிற்றில் கட்டிக்கொண்டு குழந்தையுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2017-10-16 23:15 GMT
சேலம்,

சேலம் அன்னதானப்பட்டி அகத்தியர் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 38), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சுபா (35). இவர்களுக்கு பாலா (11), பிரசாந்த் (7), கிஷோர் (4) ஆகிய 3 மகன்கள். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 13-ந் தேதி வீட்டில் பாலா, பிரசாந்த் ஆகிய 2 பேரையும் விட்டுவிட்டு குழந்தை கிஷோருடன் சுபா வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. மனைவி சுபா மற்றும் குழந்தை கிஷோரை ரமேசும், அவரது உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்தநிலையில், அப்பகுதியில் இருக்கும் கந்தப்பா காலனியில் ஒரு ரேஷன் கடை பின்புறம் உள்ள விவசாய கிணற்றில் சுபா பிணமாக மிதப்பதாக அப்பகுதியில் தகவல் பரவியது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள், அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்திற்கும், செவ்வாய்பேட்டை தீயணைப்பு படை வீரர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் மிதந்த சுபாவின் பிணத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சிறிது நேரத்துக்கு பிறகு கயிறு கட்டி அவரது உடல் மேலே மீட்கப்பட்டது. ஆனால், பிணம் தலைக்குப்புற படுத்திருந்த நிலையில் இருந்ததால் அவருடன் சென்ற குழந்தை கிஷோரின் கதி என்ன? என்பதில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

குழந்தையின் உடல் கிணற்றுக்குள் உள்ளதா? என்று தீயணைப்பு வீரர்கள் தேட ஆரம்பித்தனர். ஆனால், குழந்தை கிடைக்கவில்லை. சம்பவத்தன்று சுபா, குழந்தை கிஷோருடன் வீட்டில் இருந்து வெளியே சென்றதாக ரமேசின் உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

இது ஒருபுறம் இருக்க, சுபாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது ஆம்புலன்சில் ஏற்றுவதற்காக சுபாவின் உடலை திருப்பும்போதுதான் அங்கிருந்தவர்களுக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. அவரது வயிற்றுப்பகுதியில் குழந்தை சேலையால் கட்டப்பட்டு இறந்து கிடந்தது.

கிணற்றில் குதிப்பதற்கு முன்பு சுபா தனது குழந்தை கிஷோரை வயிற்றுப்பகுதியில் வைத்து சேலையால் இறுக்கி கட்டி இருக்கிறார். பின்னர் குழந்தையுடன் கிணற்றில் குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டார். அப்போது குழந்தை கிஷோரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டது தெரியவந்தது.

இதையடுத்து சுபா மற்றும் குழந்தை கிஷோரின் உடல்களை பார்த்து அவர்களது உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. பின்னர், இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து இறந்த சுபாவின் உறவினர்களிடமும், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடமும் விசாரணை நடத்தினார்.

இந்த விசாரணையில், கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததும், இதனால் மனவேதனை அடைந்த சுபா தனது குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. அதேசமயம், அவரது சாவிற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத்தகராறில் குழந்தையுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்