சேலம் காந்திநகரில், 180 வீடுகளை காலி செய்ய மீண்டும் நோட்டீஸ் வீட்டு வசதிவாரியம் நடவடிக்கை

உயிரிழப்புக்கு அரசு பொறுப்பேற்காது என்று, சேலம் காந்தி நகரில் 180 வீடுகளை காலி செய்ய வீட்டு வசதி வாரியம் சார்பில் மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.;

Update:2017-10-21 04:30 IST
சேலம்,

சேலம் களரம்பட்டி காந்திநகரில் கடந்த 1972-ம் ஆண்டு குடிசை மாற்று வாரியத்தால் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. அவற்றில் 180 வீடுகள் உள்ளன. துப்புரவு பணியாளர்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் இங்கு வசித்து வருகிறார்கள்.

அவர்களில் பலர், அந்த வீட்டை வெளிநபர்களுக்கு விற்பனை செய்து விட்டனர். 45 ஆண்டுக்கு மேலான அக்கட்டிடம் பராமரிப்பின்றி சிதிலம் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, அதை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட சேலம் வீட்டு வசதி வாரியம் முடிவு செய்தது. கடந்த 5 ஆண்டுகளாக வீட்டை காலி செய்து கொடுக்க நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியும் நேரில் சென்று விளக்கியும் குடியிருப்புவாசிகள் காலி செய்திட மறுத்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று வீட்டு வசதி வாரிய நிர்வாகம் தரப்பில், 180 வீடுகளையும் காலி செய்யுமாறு மீண்டும் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது. சேலம் வீட்டு வசதி வாரிய நிர்வாக அதிகாரி செல்வராஜன் உத்தரவின்பேரில், உதவி செயற்பொறியாளர் அற்புதம், உதவி பொறியாளர்கள் ராஜாராம், ராஜேந்திரன், ஜெகநாதன் மற்றும் குழுவினர் வீடு, வீடாக நோட்டீஸ் வழங்கினர்.

அப்போது சிலர் நோட்டீசை வாங்க மறுத்தனர். உடனே அதிகாரிகள், வீட்டின் சுவரில் நோட்டீசை ஒட்டிச்சென்றனர். பாதுகாப்புக்காக சேலம் உதவி போலீஸ் கமிஷனர் சுந்தரமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் சரவணன், செந்தில்குமார் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

குடியிருப்புவாசிகளுக்கு வழங்கப்பட்ட நோட்டீசில்,“கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுனர் குழுவின் பரிந்துரைப்படி, வீடுகள் மிகவும் சிதிலம் அடைந்து குடியிருக்க தகுதியற்ற நிலையில் உள்ளது. எனவே, குடியிருப்பவர்களுக்கு உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால், ஏற்படும் உயிரிழப்பு மற்றும் பொருட் சேதத்திற்கு வாரியமோ, அரசோ பொறுப்பேற்க இயலாது. எனவே, தங்கள் வீடுகளை காலி செய்து உடனடியாக வாரியம் வசம் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது“ என கூறப்பட்டுள்ளது.

குடியிருப்புவாசிகள் தரப்பில் கூறுகையில்,“புதிதாக வீடுகளை கட்டிக்கொடுக்கும்போது குடியிருப்பவர்களுக்கே மீண்டும் வழங்க வேண்டும். அதற்கான உத்தரவாதம் வழங்கினால் மட்டுமே வீடுகளை காலி செய்வோம்“ என்றனர். 

மேலும் செய்திகள்