மின்இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி செயற்பொறியாளர் கைது

ஆலங்காயத்தில் வீட்டுக்கு மின்இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி செயற்பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-10-20 23:00 GMT
வாணியம்பாடி,

வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் மசூதி தெருவில் அப்துல்சாகிப் என்பவர் புதிதாக வீடு கட்டியுள்ளார். புதிய வீட்டுக்கு மின் இணைப்பு பெறுவதற்கு ஆலங்காயம் மின்வாரிய அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

மின் இணைப்பு வழங்க மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் பாலு, அப்துல்சாகிப்பிடம் ரூ.15 ஆயிரம் கேட்டுள்ளார். பில் தொகை ரூ.10 ஆயிரம் மற்றும் லஞ்சமாக ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார்.

இதையடுத்து அப்துல்சாகிப் தன்னால் ரூ.5 ஆயிரம் கொடுக்க முடியாது. ரூ.3 ஆயிரம் தருவதாக கூறியுள்ளார். இதனால் உதவி செயற்பொறியாளர் பாலு மின் இணைப்பு வழங்காமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்துல்சாகிப் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.

உதவி செயற்பொறியாளர் கைது

அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அப்துல்சாகிப்பிடம் கொடுத்து அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து நேற்று காலை அப்துல்சாகிப், உதவி செயற்பொறியாளர் பாலுவை சந்தித்து ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரத்தை கொடுத்தார்.

அப்போது மறைந்திருந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியம் தலைமையிலான போலீசார் கையும், களவுமாக உதவி செயற்பொறியாளர் பாலுவை கைது செய்தனர்.

அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்