திருக்குறுங்குடி அருகே பரிதாபம் மணல் சரிந்து விழுந்து அமுக்கியதில் இளம்பெண் சாவு

திருக்குறுங்குடி அருகே மணல் சரிந்து விழுந்து அமுக்கியதில் இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.

Update: 2017-10-21 20:30 GMT
ஏர்வாடி,

திருக்குறுங்குடி அருகே மணல் சரிந்து விழுந்து அமுக்கியதில் இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.

நம்பியாறு

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே உள்ள நம்பித்தலைவன்பட்டயம் கீழ தெருவை சேர்ந்தவர் தங்க இசக்கி. அவருடைய மனைவி மாரியம்மாள் (வயது 26). இந்த தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். திருக்குறுங்குடி அருகே உள்ள பகுதிகளில் வீடு கட்டும் வேலைக்கு மாரியம்மாள் உள்பட 4 பேர் சேர்ந்து நம்பியாற்றில் மணல் அள்ளி, அதனை சாக்கு பையில் கட்டி தலைச் சுமையாக கொடுத்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானம் மூலம் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

நேற்று காலை வழக்கம் போல் மாரியம்மாள் உள்பட 4 பேர் சேர்ந்து நம்பியாற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். ஆற்றின் கரையோரத்தில் உள்ள மணல் மேடான பகுதியின் கீழே நின்று கொண்டு மாரியம்மாள் மணல் அள்ளிக் கொண்டிருந்தார்.

மணல் சரிந்து அமுக்கியது

அப்போது மணல் திடீரென சரிந்து விழுந்து மாரியம்மாளை அமுக்கியது. இதில் மாரியம்மாள் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அப்போது அருகே மணல் அள்ளிக் கொண்டிருந்த மற்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருக்குறுங்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மாரியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சப்–இன்ஸ்பெக்டர் வேலம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

மேலும் செய்திகள்