மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலி வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்

கொடைரோடு அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலியானதை தொடர்ந்து வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-10-21 23:00 GMT
கொடைரோடு,

கொடைரோடு அருகேயுள்ள பொட்டிசெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன். அவருடைய மகன் பாவேந்திரன் (வயது 6). இவன், அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 3 நாட்களுக்கு முன்பு பாவேந்திரனுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.

அதனைத்தொடர்ந்து அவன், அம்மையநாயக்கனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான். பின்னர் அவன், வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். இதைத்தொடர்ந்து அவன், மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி பாவேந்திரன் பரிதாபமாக இறந்தான். மர்ம காய்ச்சலால் பாதிக் கப்பட்டு பாவேந்திரன் இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே பாவேந்திரனுடைய உடல், பொட்டிசெட்டிபட்டி கிராமத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதற்கிடையே மாணவன் டெங்கு காய்ச்சலால் இறந்திருக்கலாம் என்று பீதி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று அப்பகுதி மாணவ, மாணவிகள் பள்ளிக்கூடத்துக்கு செல்லாமல் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுக்கு ஆதரவாக மாணவர்களின் பெற்றோர் களும், அப்பகுதி மக்களும் களத்தில் குதித்தனர். இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் மாணவ, மாணவிகளை வகுப்பறைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார். ஆனால் மாணவ, மாணவிகள் யாரும் சம்மதிக்கவில்லை.

இதையடுத்து இறந்த மாணவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பள்ளிக்கு விடுமுறை அளித்து தலைமை ஆசிரியர் உத்தரவிட்டார். பின்னர் மாணவ, மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்