டெங்கு, மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவன், பெண் உள்பட 3 பேர் பலி

ஆம்பூர், பேரணாம்பட்டு, டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவன், பெண் உள்பட 3 பேர் பலியாயினர்.

Update: 2017-10-21 22:45 GMT
பேரணாம்பட்டு,

ஆம்பூர் ரத்தினம் நகர் பகுதியை சேர்ந்தவர் சலீம். இவரது மகன் முகமத் யஹியா (வயது 7), அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான். மாணவனுக்கு சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. இதனால் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 18-ந் தேதி அனுமதிக்கப்பட்ட முகமத்யஹியா, மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். அங்கு பரிசோதித்து பார்த்த போது மாணவனுக்கு டெங்கு அறிகுறி இருப்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில் முகமத்யஹியாவை அவனது பெற்றோர் வீட்டுக்கு அழைத்து வந்தனர். ஆனால் வழியிலேயே அவன் இறந்து விட்டான்.

டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் இறந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் நகராட்சி சார்பில் ஒட்டுமொத்த துப்புரவு பணி நடந்தது. பணிகளை உதவி கலெக்டர் வளர்மதி, ஆணையாளர் குமார், தாசில்தார் மீராபென் காந்தி ஆகியோர் பார்வையிட்டனர். மேலும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நகரில் உள்ள அனைத்து பகுதியில் துப்புரவு பணி நடந்து வருகிறது.

மர்ம காய்ச்சல்

பேரணாம்பட்டு டவுன் ரஷிதாபாத் பகுதியை சேர்ந்தவர் நசீர். இவரது மனைவி கவுசர் (வயது 34), கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனையொட்டி நேற்று முன்தினம் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். கவுசருக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால் அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கும் குணமாகாததால் கவுசர் வேலூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

இதேபோல் பேரணாம்பட்டை அடுத்த கோக்கலூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன். இவரது மகள் காவ்யா (3½), கடந்த 10 நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பேரணாம்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு சிகிச்சை பலனின்றி காவ்யா பரிதாபமாக இறந்தாள்.

கவுசர் மற்றும் காவ்யாவுக்கு ஏற்பட்ட காய்ச்சல் எந்த வகையானது என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

சுகாதார தடுப்பு பணிகள்

பேரணாம்பட்டு பகுதியில் மர்ம காய்ச்சலால் 2 பேர் இறந்த சம்பவத்தை தொடர்ந்து நகராட்சி பகுதியில் உதவி கலெக்டர் நாராயணன் தலைமையில் நகராட்சி ஆணையாளர் ஸ்டேன்லிபாபு மற்றும் பணியாளர்கள் தீவிர சுகாதார பணியில் ஈடுபட்டனர்.

மேலும் தொழிற்சாலைகளில் ஆய்வு செய்த போது டெங்கு கொசுக்கள் கண்டறியப்பட்ட தனியார் தொழிற்சாலைக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அப்போது தாசில்தார் பத்மநாபன் மற்றும் வருவாய்துறையினயர் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்