ராக்கெட் தயாரித்து மேலூர் அரசு பள்ளி மாணவிகள் சாதனை

மேலூர் அரசு பள்ளி மாணவிகள் ராக்கெட் தயாரித்து சாதனை படைத்துள்ளனர்.

Update: 2017-10-21 23:12 GMT
மேலூர்,

மேலூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் தொழில்நுட்ப மன்ற பொறுப்பாளர் சூரியகுமார் தலைமையில் 8-ம் வகுப்பு மாணவிகள் மான்ஷி, ஹரிப்பிரியா, சாருமதி, அட்சயா, சிபாயா, துளசிமணி, மதுமிதா, பரிதாபானு, சுவேதா, மற்றொரு சுவேதா உள்ளிட்ட மாணவிகள் அடங்கிய குழுவினர் மாதிரி ராக்கெட் ஒன்றை தயாரித்தனர். குடிநீர் பிளாஸ்டிக் பாட்டிலால் உருவாக்கப்பட்ட அந்த ராக்கெட் நேற்று பள்ளி தலைமை ஆசிரியை டெய்சிநிர்மலா முன்னிலையில் பறக்கவிடப்பட்டது. பள்ளி மாணவிகளும், ஆசிரியைகளும் கைதட்டி ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர்.

இதுகுறித்து அந்த மாணவிகள் கூறியதாவது:- கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அப்துல்கலாம் நினைவாக மாதிரி ராக்கெட் ஒன்றினை தயாரித்து பள்ளியில் பார்வைக்கு வைத்திருந்தோம். அதைத்தொடர்ந்து உயரே பறக்கும் வகையில் உந்து சக்தியில் இயங்கும் ராக்கெட்டை தயாரிக்க முடிவுசெய்தோம். வெடிக்காத, வெடி மருந்தினை பயன்படுத்தாமல் ஆபத்தில்லாத பல்வேறு திரவங்களை பயன்படுத்தி சோதனையில் ஈடுபட்டோம்.

அப்போது அன்றாடம் உணவு சமையலில் பயன்படுத்தும் எலுமிச்சை பழச்சாரில் கிடைக்கும் சிட்ரிக் அமிலத்தை, சமையல் சோடாவுடன் கலந்து குடிதண்ணீரை பயன்படுத்தி திரவ எரிபொருளை கண்டுபிடித்தோம். குடிதண்ணீர் பிளாஸ்டிக் பாட்டிலில் தயாரித்த ராக்கெட்டில் அந்த திரவ எரிபொருளை குறிப்பிட்ட அளவுக்கு நிரப்பி உயரே பறக்க வைத்தோம்.

அப்துல்கலாம் முதன்முதலில் தயாரித்த ராக்கெட் 2 அடி உயரம் பறந்ததாக அவர் சொல்லியிருந்தார். அதுவே எங்களுக்கு ஊக்கம் தந்து இந்த ராக்கெட்டை 10 அடி உயரத்துக்கு பறக்க விட்டுள்ளோம். எங்களுக்கு அரசு உதவி செய்தால் உயரமாக அதிக தூரத்தை கடந்து பறந்து செல்லும் ராக்கெட்டையும் தயாரிப்போம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்