திருக்கோவிலூர் அருகே மணல் குவாரியை மூடக்கோரி கிராம மக்கள் திடீர் போராட்டம்

திருக்கோவிலூர் அருகே மணல் குவாரியை மூடக்கோரி கிராம மக்கள் திடீர் போராட்டத்தில் விவசாயி ஒருவர் தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-10-31 22:45 GMT

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே வடக்குநெமிலி ஊராட்சி எல்லைக்குட்பட்ட தென்பெண்ணை ஆற்றில் அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது. இந்த மணல் குவாரியில் நேற்று வழக்கம்போல லாரியில் மணல் ஏற்றும் பணி நடைபெற்று கொண்டிருந்தது.

அப்போது, அதே பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சிலர், திடீரென மணல் குவாரியை மூடக்கோரி அங்குள்ளவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப்–இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

இந்த நிலையில் விவசாயி ஒருவர் மண்எண்ணெய் கேனுடன் அங்கு வந்து, தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்த போலீசார் அவரிடமிருந்து மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, மணல் குவாரியை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இப்பிரச்சினை சம்பந்தமாக கலெக்டரிடம் மனு கொடுத்து பேசி முடிவு எடுக்கலாம் என்றனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையடுத்து மணல் ஏற்றி சென்ற லாரிகளை 3 இடங்களில் அப்பகுதியை சேர்ந்த சிலர் வழிமறித்து அதன் டிரைவர்களிடம் பணம் வசூலித்தாக புகார் எழுந்தது. இதை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த கும்பலை அங்கிருந்து எச்சரித்து அப்புறப்படுத்தினர்.

மேலும் செய்திகள்