மணல் குவாரி மீண்டும் திறப்பு லாரிகளுக்கு லோடு ஏற்றும் பணி தொடங்கியது

மோகனூரில் மணல் குவாரி மீண்டும் திறக்கப்பட்டு, லாரிகளுக்கு லோடு ஏற்றும் பணி தொடங்கியது.

Update: 2017-11-01 22:30 GMT
மோகனூர்,

நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி ஆற்றில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வந்தது. இங்கு அரசு விதிமுறை மீறுவதாகவும், அதிக மணல் ஏற்றிச்செல்வதால் சாலை பழுதடைவதாகவும் புகார் எழுந்தது. மேலும் இந்த குவாரியால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதை கருத்தில்கொண்டு மணல் குவாரியை மூடவேண்டும் என்றும், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

இதன் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் முதல் மோகனூரில் மணல் குவாரி செயல்படவில்லை. பின்னர் 6 மாதத்திற்கு பின் கடந்த ஜூன் மாதம் மீண்டும் அதே இடத்தில் குவாரி ஏற்படுத்தப்பட்டு, மணல் அள்ளுவதற்கு பூஜை போடப்பட்டது. தகவல் அறிந்த விவசாயிகள் அங்கு வந்து மணல் லாரிகளை முற்றுகையிட்டனர். அதை தொடர்ந்து தற்காலிகமாக மணல் குவாரி மூடப்பட்டது.

மீண்டும் திறப்பு

இந்த நிலையில் நேற்று ஒருவந்தூர் காவிரி ஆற்றில் மீண்டும் மணல் குவாரி திறக்கப்பட்டது. லாரிகளுக்கு லோடு ஏற்றும் பணியும் தொடங்கியது. ஒரு லாரிக்கு இரண்டு யூனிட் மணல் ரூ.1,080-க்கு ஏற்றப்பட்டது. ஏற்கனவே, ஆன்-லைன் மூலம் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே மணல் லோடு செய்யப்படுகிறது. நேற்று 50 லாரிகளுக்கு மட்டுமே மணல் லோடு கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது.

இதையொட்டி பொதுப்பணித் துறையின் கனிமம் மற்றும் கண்காணிப்பு பிரிவு உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியம் தலைமையில் லாரிகள் சரிபார்க்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, மணல் குவாரிக்கு வந்து பாதுகாப்பு பணியை பார்வையிட்டார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராமசாமி தலைமையில் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்