புதுக்கடை அருகே ஜீப் மோதி, கண்டக்டர் பலி மற்றொரு விபத்தில் பெண் சாவு

புதுக்கடை அருகே ஜீப் மோதி அரசு பஸ் கண்டக்டர் பரிதாபமாக இறந்தார். மற்றொரு விபத்தில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலியானார்.

Update: 2017-11-02 22:45 GMT
புதுக்கடை,

புதுக்கடை அருகே பனவிளையை சேர்ந்தவர் ரவிசந்திர குமார் (வயது 54), குழித்துறை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பஸ் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு லதா என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

நேற்று மதியம் ரவிசந்திரகுமார், புதுக்கடையில் இருந்து வீட்டுக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே ஒரு ஜீப் வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் சைக்கிள் மீது ஜீப் மோதியது. இதில் ரவிசந்திரகுமார் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

பரிதாப சாவு

உடனே, ஜீப் டிரைவர் வேகமாக செயல்பட்டு ரவிசந்திரகுமாரை மீட்டு தனது ஜீப்பில் ஏற்றி மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி ரவிசந்திரகுமார் பரிதாபமாக இறந்தார். இறந்த தகவல் அறிந்ததும், ஜீப் டிரைவர் அங்கிருந்து நைசாக நழுவி தலைமறைவானார்.

இந்த விபத்து குறித்து புதுக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  

மற்றொரு சம்பவம்

புதுக்கடை அருகே சின்னத்துறையை சேர்ந்தவர் வர்க்கீஸ், மீன்பிடி தொழிலாளி. இவருடைய மனைவி பனியம்மை (வயது 53). இவர் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் பால் வாங்குவதற்காக வீட்டின் அருகில் உள்ள கடைக்கு சென்றார்.

பால் வாங்கி விட்டு வீட்டுக்கு சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக குளச்சலை சேர்ந்த 17 வயது சிறுவன் மோட்டார் சைக்கிளில் வந்தார். எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் பனியம்மை மீது மோதியது. இதனால் அவர் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே, அருகில் நின்றவர்கள் அவரை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.

கைது

இதுகுறித்து புதுக்கடை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த 17 வயது சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்