ஆற்றில் மதுபிரியர்களுக்காக அமைக்கப்பட்ட மரப்பாலம் அகற்றம் கலால் துறை அதிகாரி நடவடிக்கை

செட்டிப்பட்டு சங்கராபரணி ஆற்றின் குறுக்கே மது பிரியர்களுக்காக அமைக்கப்பட்டு இருந்த மரத்தால் ஆன பாலத்தை கலால் துறை அதிகாரி அதிரடியாக அகற்றினர்.

Update: 2017-11-02 23:00 GMT
திருக்கனூர்,

புதுவை மாநிலம் திருக்கனூர் அருகே உள்ள செட்டிப்பட்டு வழியாக சங்கராபரணி ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் மறுகரையில் தமிழக பகுதியான திருவக்கரை, கொடுக்கூர், எறையூர், செங்கமேடு ஆகிய கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களை சேர்ந்தவர்கள் செல்லிப்பட்டு பகுதியில் உள்ள சாராயக்கடையில் குறைந்த விலையில் சாராயம் குடிக்க ஆற்றைக்கடந்து வந்து செல்கின்றனர். இதனால் சாராயக்கடையில் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. ஆற்றில் குறைவாக தண்ணீர் ஓடும் நேரத்தில் மணல் பரப்பின் மேல் நடந்து வந்து விடுவார்கள். தற்போது பெய்து வரும் மழையால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சாராயம் குடிக்க வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து, சாராய கடைக்கு வருமானம் குறைந்தது.

இதை சரிசெய்யும் வகையிலும், தமிழக குடிமகன்கள் தடையின்றி வந்து செல்ல ஏதுவாக ஆற்றின் குறுக்கே பனை மரம், சவுக்கு கட்டைகள், பேரல்கள் உதவியுடன் சாராயக்கடையினர் தற்காலிக மரப்பாலம் அமைத்துள்ளனர். இதன் வழியாக மதுபிரியர்கள் வந்து சென்றனர்.

அத்துமீறி அமைக்கப்பட்ட இந்த பாலம், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அடித்துச் செல்லப்பட்டு, அதில் நடந்து செல்பவர்களின் உயிருக்கு ஆபத்தாக இருந்தது. இதை அறிந்த கலால் துறை தாசில்தார் குமரன், கலால் போலீசார், திருக்கனூர் போலீசாருடன் நேற்று செட்டிப்பட்டு சங்கராபரணி ஆற்றுக்கு சென்றனர். இரு கரைகளிலும் மரப்பாலத்தின் இணைப்பை அதிரடியாக அகற்றினர். மேலும் பாலத்தை முழுமையாக அகற்ற சாராயக்கடை உரிமையாளருக்கு தாசில்தார் உத்தரவிட்டார்.

மரப்பாலம் அகற்றப்பட்டதால் தமிழக பகுதியை சேர்ந்த மதுபிரியர்கள் செட்டிப்பட்டுக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்