பெண்ணாடம் அருகே அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

பெண்ணாடம் அருகே அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2017-11-03 22:30 GMT

விருத்தாசலம்,

பெண்ணாடம் அருகே உள்ள பொன்னேரி திடீர்குப்பம் பகுதியில் 30–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தற்போது பெய்து வரும் பருவமழையால் இங்குள்ள சாலை சேறும் சகதியுமாக உள்ளது. அதோடு குடியிருப்புகளை சுற்றிலும் மழைநீர் நீர் தேங்கி நின்று தீவு போன்று காட்சி அளித்து வருகிறது.

மேலும் இங்கு கடந்த சில நாட்களாக குடிநீரும் பொதுமக்களுக்கு சரியாக வினியோகம் செய்ய வில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஏற்கனவே புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் தற்போது பருவமழை தீவிரமடைந்து இருப்பதால், இந்த பகுதியில் நிலைமை மேலும் மோசமடைந்தது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை விருத்தாசலம்–திட்டக்குடி சாலையில் பொன்னேரியில் உள்ள ரெயில்வே மேம்பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த பெண்ணாடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, கிராம நிர்வாக அலுவலர் துரைராஜ், கிராம நிர்வாக அலுவலர் துரைராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்க விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அவர்கள் தங்கள் பகுதியில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என்று தெரிவித்தனர்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையேற்று அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனிடையே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மறியல் செய்ததாக கூறி கிராம நிர்வாக அலுவலர் துரைராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார்த்திக் (வயது 24), சதாம்உசேன் (26) மற்றும் பானுமதி (41), வேளாங்கண்ணி (42), மேரி (38), பிரியதர்ஷினி (24), ஜாகிரா (50), அம்சவள்ளி (40), கவிதா (35), தமிழரசி (45) ஆகியோரை கைது செய்து, பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்