காவிரி ஆற்று படுகையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு லாரிகளில் மணல் வரத்து அதிகரிப்பு முறையான கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்படுமா?

விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு காவிரி ஆற்று படுகையில் இருந்து லாரிகளில் மணல் வரத்து அதிகரித்துள்ள நிலையில் அதனை முறையாக கண்காணிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2017-11-17 22:15 GMT

விருதுநகர்,

விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மணல் குவாரிகள் செயல்பட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மணல் குவாரிகள் மூடப்பட்டன. இதனால் இம்மாவட்டங்களில் கட்டுமான பணிக்கு தேவையான மணல் வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கிடையில் மணல்குவாரிகள் செயல்பட ஐகோர்ட்டு தடை விதித்ததால் கட்டுமான பணிகளுக்கு மணல் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக கட்டுமான பணி முற்றிலுமாக முடங்கி கட்டிட தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து ஐகோர்ட்டு நிபந்தனைகளுடன் மணல் குவாரி செயல்பட அனுமதி அளித்ததை தொடர்ந்து காவிரி ஆற்று படுகையில் மணல் குவாரி செயல்பட அரசு அனுமதி வழங்கியது. எனினும் ஐகோர்ட்டு விதித்த நிபந்தனைகளின்படி தான் மணல் குவாரி செயல்பட வேண்டும் என்றும், இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக கண்காணிக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டது. அதன்படி காவிரி ஆற்றுப்படுகையில் இருந்து மணல் தென்மாவட்டங்களுக்கு வர தொடங்கியது.

சமீபகாலமாக விருதுநகர், நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு திருச்சி மற்றும் தஞ்சாவூர்களில் இருந்து அந்த மாவட்டத்தில் உள்ள லாரிகள் மூலம் மணல் கொண்டு வருவது அதிகரித்தது. இந்த லாரிகளை விருதுநகர் மாவட்ட பகுதியில் போலீசார் சோதனையிட்ட போது லாரிகளில் மணல் கொண்டு வருவதற்கான அனுமதி சீட்டோ, முறையான ஆவணங்களோ இல்லாதது கண்டு பிடிக்கப்பட்டது. இதன் காரணமாக லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு மேல் நடவடிக்கைகாக மாவட்ட வருவாய் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டதோடு மணல் லாரி டிரைவர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தென்மாவட்டங்களுக்கு செல்லும் மணல் லாரிகளை விருதுநகர் மாவட்ட போலீசார் நாள் முழுவதும் சோதனை மேற்கொள்ள இயலாத நிலையில் அவ்வபோது சோதனை மேற்கொண்டபோது அனுமதி இல்லாத மணல் லாரிகள் போலீசாரிடம் சிக்குவது வாடிக்கையாகிவிட்டது. அதிலும் மதுரை–கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகர்–சாத்தூர் இடையே தினசரி மணல் லாரிகள் பறிமுதல் செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. எனினும் போலீசார் நடவடிக்கை எடுப்பது தெரிந்த பின்னரும் தினசரி அனுமதி இல்லாமல் மணலை ஏற்றிக்கொண்டு லாரிகள் வந்த வண்ணமே உள்ளன.

எனவே திருச்சி–தஞ்சை மாவட்டங்களில் இருந்து தென்மாவட்டங்களுக்கு மணல் குவாரி பகுதிகளில் அனுமதி சீட்டு இல்லாமலே மணல் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. வழியில் சோதனையின் போது தான் அனுமதி இல்லாதது தெரியவருகிறது. இந்த நிலையில் மணல் குவாரி பகுதிகளில் விதிமுறைகளை மீறி மணல் அள்ளப்பட்டு லாரிகளில் அனுப்பப்படுவது முறையாக கண்காணிக்கப்பட வேண்டும். முறையான கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இல்லையேல் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுவிடும்.

மேலும் செய்திகள்