அடுத்த 4 மாதத்தில் ரெயில் நிலையங்களில் 52 நகரும் படிக்கட்டுகள்

அடுத்த 4 மாதத்தில் ரெயில் நிலையங்களில் 52 நகரும் படிகட்டுகளை அமைக்க மத்திய ரெயில்வே இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

Update: 2017-11-17 22:42 GMT

மும்பை,

மும்பை எல்பின்ஸ்டன் ரோடு ரெயில்நிலையத்தில் கடந்த செப்டம்பர் மாதம் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தை அடுத்து ரெயில்நிலையங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரெயில்வே நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. அடுத்த 4 மாதங்களில் மும்பையில் உள்ள ரெயில்நிலையங்களில் 52 நகரும் படிக்கட்டுகள் மற்றும் 25 லிப்டுகளை அமைக்க மத்திய ரெயில்வே இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

இதில் இந்த மாதம் டிட்வாலா ரெயில்நிலையத்தில் நகரும் படிக்கட்டு திறந்து வைக்கப்பட உள்ளது. அடுத்த மாதம் தாதர், தானே ரெயில் நிலையங்களில் 2 நகரும் படிக்கட்டும், டாக்யார்டுரோடு ரெயில்நிலையத்தில் ஒரு நகரும் படிக்கட்டும் பயணிகளின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட உள்ளது. இதேபோல அடுத்த ஆண்டு ஜனவரியில் 11 நகரும் படிக்கட்டுகளும், பிப்ரவரியில் 21 நகரும் படிக்கட்டுகளும், மார்ச் மாதம் 14 நகரும் படிக்கட்டுகளும் மும்பையில் உள்ள ரெயில்நிலையங்களில் பயணிகளின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட உள்ளது.

இதுகுறித்து மத்திய ரெயில்வே மும்பை கோட்ட மேலாளர் எஸ்.கே.ஜெயின் கூறுகையில், ‘‘ பயணிகளுக்கு தேவையான வசதிகளை விரைவில் செய்து கொடுக்க உறுதி எடுத்து உள்ளோம். எனவே இலக்கு நிர்ணயம் செய்து நகரும் படிக்கட்டுகள், லிப்டுகள் அமைக்கும் பணிகளை முடிக்க உள்ளோம் ’’ என்றார்.


மேலும் செய்திகள்