ஓய்வு பெற்றதால் ஊதிய உயர்வை வழங்க மறுக்கக்கூடாது மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

ஓய்வு பெற்றதால் ஊதிய உயர்வை வழங்க மறுக்கக் கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2017-11-18 22:45 GMT

மதுரை,

மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு அரசு துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு கடைசி ஊதிய உயர்வு மறுக்கப்பட்டது. ஊதிய உயர்வு வருவதற்கு முதல் நாள் பணியில் இருந்து ஓய்வு பெற்றதால் ஊதிய உயர்வு மறுக்கப்பட்டது. இதையடுத்து தங்களுக்கு கடைசி ஊதிய உயர்வு தொகையை அனுமதிக்க வேண்டும்.

அந்த ஊதிய உயர்வின் அடிப்படையில் ஓய்வூதியத்தில் மாறுதல் செய்யவும் உத்தரவிட வேண்டும் என்று கூறி, மதுரை கூட்டுறவு துறையில் சார் பதிவாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற எஸ்.உஷா, மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளியின் ஓய்வு பெற்ற உடற்பயிற்சி இயக்குனர் வீரமணி, நரசிங்கம் கிராம நிர்வாக அலுவலர் சண்முகசுந்தரம், சிவகங்கை மாவட்ட கருவூலத்தில் சிறப்பு நிலை கணக்காளராக பணியாற்றிய ரெனால்டு உள்பட பலர் மதுரை ஐகோர்ட்டில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதி ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் விஸ்வலிங்கம் ஆஜரானார்.

விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

2014–ம் ஆண்டுக்கு பிறகு ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டுமே கடைசி ஆண்டுக்கான ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்து உள்ளது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு, 2014–ம் ஆண்டுக்கு முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கும் கடைசி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

அப்படியிருக்கும்போது மனுதாரர்களுக்கு கடைசி ஊதிய உயர்வு அமலுக்கு வரும் முதல் நாள் ஓய்வு பெற்றுவிட்டார்கள் என்பதற்காக ஊதிய உயர்வை வழங்க மறுக்கக்கூடாது. மனுதாரர்களுக்கு கடைசி ஊதிய உயர்வு பலன்களை வழங்க மறுத்த உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன. எனவே மனுதாரர்களுக்கு 6 வாரத்தில் கடைசி ஊதிய உயர்வை வழங்க நிதித்துறை செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்