அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் செயல்படும் மகப்பேறு மருத்துவ பிரிவு தொடங்கப்படும்

பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் சிறப்பு மகப்பேறு மருத்துவ பிரிவு தொடங்கப்பட உள்ளது என டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.

Update: 2017-11-18 23:00 GMT
பென்னாகரம்,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் வெந்நீர் வழங்கும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் வழங்கும் நிலைய தொடக்க விழா பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நேற்று நடைபெற்றது. மருத்துவ பணிகள் இணை இயக்குனர் பொன்ராஜ் வரவேற்றார். முன்னாள் எம்.பி.டாக்டர் செந்தில், மாநில துணைபொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன், மாநில துணைத்தலைவர்கள் பாடிசெல்வம், சாந்தமூர்த்தி, குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த விழாவில் தர்மபுரி எம்.பி. டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையத்தை திறந்து வைத்தார்.

விழாவில் அவர் பேசியதாவது:-

மருத்துவமனை போகாமல் தடுப்பது தான் நல்ல மருத்துவம். நல்ல குடிநீர், நல்ல ஊட்டச்சத்து, நல்ல சுற்றுச்சூழல் அமைந்தால் மருத்துவமனை போக தேவையில்லை. 50 சதவீத நோய் சுகாதாரமற்ற குடிநீரால்தான் ஏற்படுகிறது. அதற்காக தான் இந்த சுத்திரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையம் அமைத்துள்ளோம். அரசு ஆஸ்பத்திரிகளில் 300 படுக்கைகள் இருக்க வேண்டும். ஆனால் பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் 120 படுக்கைகள் மட்டுமே உள்ளது. கூடுதல் படுக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரி அமைய காரணமாக இருந்தது பா.ம.க. தான். மருத்துவமனைக்கு கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்கப்படவேண்டும். பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மகப்பேறு சிறப்பு மருத்துவ பிரிவு தொடங்கப்பட உள்ளது. மேலும் விபத்து அவசர சிகிச்சை பிரிவு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் மாவட்ட செயலாளர்கள் சண்முகம், இமயவர்மன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வேலுசாமி, பாரிமோகன், வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் பெரியசாமி, மாவட்ட தலைவர் செல்வக்குமார், தாசில்தார் சேதுலிங்கம், மருத்துவ அலுவலர் கனிமொழி, டாக்டர் சிவகுமார் செந்தில் முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் விமலன் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்