வருகிற 23-ந்தேதி கூடுகிறது: புதுவை சட்டசபையில் பராமரிப்பு பணிகள் தீவிரம்

புதுவை சட்டசபை வருகிற 23-ந்தேதி கூடுவதையொட்டி பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2017-11-19 22:45 GMT
புதுச்சேரி,

புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மே மாதம் 16-ந்தேதி தொடங்கி ஜூன் மாதம் 16-ந்தேதி நடந்தது. இந்தநிலையில் குளிர்கால கூட்டம் வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ளது.

இதற்காக சட்டமன்ற கூட்டம் நடக்கும் கூட்ட அரங்கில் பராமரிப்பு பணிகள் தொடங்கி உள்ளது. இதில் இருக்கைகள் பழுதுபார்த்தல், ஒலிபெருக்கிகள் சரியாக இயங்குகிறதா? குளிர்சாதன வசதிகள் முறையாக இருக்கிறதா? போன்ற பணிகள் நடந்தன.

நியமன எம்.எல்.ஏ.க்கள்

இந்த குளிர்கால கூட்டம் எத்தனை நாட்கள் நடை பெறும் என்று இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. மத்திய அரசால் நியமிக்கப்பட்ட 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் அங்கீகரிக்கப்படாததால் அவர்களை சபாநாயகர் வைத்திலிங்கம் சட்டமன்ற வளாகத்திற்குள் அனுமதிக்கமாட்டார் என்று கூறப்படுகிறது.

இருந்தபோதிலும் அவர்கள் சட்டமன்றத்திற்குள் நுழைவோம் என்று அறிவித்துள்ளனர். இதனால் ஒரு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. வழக்கமாக இருக்கும் பாதுகாப்பினைவிட இந்த முறை சட்டமன்றம் கூடும்போது கூடுதலான பாதுகாப்பும் வழங்கப்படும் என்று தெரிகிறது.

உரிமை மீறல்

மேலும் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான அசோக் ஆனந்து, என்.எஸ்.ஜே.ஜெயபால் ஆகியோர் மீது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான தீப்பாய்ந்தான், விஜயவேணி ஆகியோர் உரிமை மீறல் பிரச்சினை கொடுத்துள்ளனர். அந்த பிரச்சினையும் இந்த கூட்டத்தில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் செய்திகள்