கடந்த ஆண்டைவிட விவசாயிகளுக்கு ரூ.1,000 கோடி கூடுதலாக பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு விவசாயிகளுக்கு ரூ.1,000 கோடி கூடுதலாக பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது என கூட்டுறவு வார விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

Update: 2017-11-19 23:00 GMT

சேலம்,

64–வது அனைத்திந்திய மாவட்ட அளவிலான கூட்டுறவு வார விழா நேற்று சேலம் அழகாபுரத்தில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சமுதாய நலக்கூடத்தில் நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கினார். மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் வரவேற்றார். கூட்டுறவு சங்கங்களின் சேலம் மண்டல இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத் திட்ட விளக்கவுரை ஆற்றினார்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பேசியதாவது:–

தமிழகத்தில் கூட்டுறவுத்துறையில் தொடர்ந்து லாபம் ஈட்டுகிற வங்கி சேலம் மாவட்ட வங்கியாகும். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக கடன் கொடுத்து முதலிடம் வகிக்கும் சிறந்த வங்கியாகவும் இது திகழ்கிறது. 2016–17–ம் ஆண்டிற்கான அகில இந்திய அளவில் சிறந்த மத்திய கூட்டுறவு வங்கிக்கான சிறப்பு பரிசை சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பெற்றுள்ளது.

தானே புயல், வறட்சி நிவாரணம், வெள்ள நிவாரணம், பயிர்க்கடன் தள்ளுபடி, குறுவை தொகுப்பு திட்டம், சம்பா தொகுப்பு திட்டம், பயிர் காப்பீட்டுக்கு இழப்பீடு என கடந்த 2011–ம் ஆண்டு முதல் கடந்த 15–ந் தேதி வரை 90 லட்சத்து 32 ஆயிரத்து 330 விவசாயிகளுக்கு ரூ.12 ஆயிரத்து 349 கோடியே 60 லட்சம் அளவிற்கு நிவாரணங்கள், சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் 6 கோடியே 41 லட்சத்து 560 விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரத்து 153 கோடி விவசாய கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகளவில் தமிழகத்தில் தான் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை பெற்றுக் கொடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு விவசாயிகளுக்கு ரூ.1,000 கோடி கூடுதலாக பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2013–ம் ஆண்டு மே மாதம் முதல் கடந்த ஜூலை மாதம் வரை கூட்டுறவுத்துறையில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக 260 குழுக்கள் கண்டறியப்பட்டு, அதில் 36 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் தி.மு.க. ஆட்சியில் முறைகேடுகளில் சிக்கியவர்களை இதுபோன்ற நடவடிக்கை எடுத்தது கிடையாது. எதிர்க்கட்சியினர் மக்களுக்கு ஒன்றுமே செய்யாமல் இருந்து கொண்டு, காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த ஆட்சி வேண்டாம் என்று குற்றம்சாட்டி வருகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து மாவட்ட அளவிலான கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்கள் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார். இந்த விழாவில் எம்.பி.க்கள் பன்னீர்செல்வம், பி.ஆர்.சுந்தரம், எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, ஜி.வெங்கடாசலம், மனோன்மணி, ராஜா, வெற்றிவேல், மருதமுத்து, சின்னதம்பி, சித்ரா, சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் மலர்விழி, சேலம் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் வெங்கடாசலம், துணைத்தலைவர் ராஜேந்திரன், மேலாண்மை இயக்குனர் சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்