தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட செவிலியர்களுக்கு அரசாணை படி சம்பளம் வழங்காவிட்டால் போராட்டம்

மருத்துவ பணிகள் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட செவிலியர்களுக்கு அரசாணை படி சம்பளம் வழங்காவிட்டால் போராட்டம் நடத்துவது என மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;

Update:2017-11-20 04:15 IST
திருச்சி,

தமிழ்நாடு மருத்துவ பணிகள் தேர்வாணையம் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது. மாநில தலைவர் புஷ்பலதா தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் கல்யாணசுந்தரம், மாநில பொதுச்செயலாளர் சுதாகர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தமிழ்நாடு மருத்துவ பணிகள் தேர்வாணையம் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 11 ஆயிரம் செவிலியர்கள் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு மாதம் ரூ.7,700 மட்டுமே தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இது தமிழக அரசின் அரசாணை எண் 191-க்கு எதிரானதாகும். மற்ற செவிலியர்களுக்கு அரசு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்போது தேர்வு எழுதி உரிய தகுதியுடன் நியமிக்கப்பட்ட இவர்களுக்கு தொகுப்பூதியத்தில் சம்பளம் வழங்கப்படுவது அநீதியாகும்.

இதனை கண்டித்து சங்கம் மூலமாக உயர் அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் எங்கள் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அரசாணைப்படி சம்பளம் வழங்காவிட்டால் வருகிற 27-ந்தேதி முதல் சென்னையில் உள்ள தமிழ்நாடு மருத்துவ சேவைகள் இயக்குனர் அலுவலகம் முன் அறவழியில் போராட்டம் நடத்தப்படும்.

மேற்கண்டவை உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் வனிதா, கோபிநாதன் திருச்சி மாவட்ட தலைவர் பொன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்