கலெக்டர் அலுவலகம் – ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் 455 பேர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2017-11-23 23:00 GMT
நாகர்கோவில்,

ஊராட்சி அலுவலக செயலாளர்களுக்கு, இளநிலை உதவியாளருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நவம்பர் 23–ந் தேதி ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் அனைவரும் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவது என ஏற்கனவே முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று குமரி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் அனைவரும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சிப்பிரிவு அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகம், உதவி இயக்குனர் (ஊராட்சிகள் தணிக்கை) அலுவலகம் மற்றும் குமரி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினர்.

நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளர்ச்சிப்பிரிவில் மாநில துணைத்தலைவர் சுமதி தலைமையில் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை மேற்கொண்டனர். இந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர் அன்பு மற்றும் நிர்வாகிகள் அவரவர் பணிபுரியும் இடங்களில் நடந்த உள்ளிருப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தால் கலெக்டர் அலுவலக வளர்ச்சிப்பிரிவு, ஊரக வளர்ச்சி முகமை, பஞ்சாயத்துகளுக்கான உதவி இயக்குனர் அலுவலகம், தணிக்கைப்பிரிவு அலுவலகம், 9 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் பணிகள் முடங்கின. இதனால் இந்த அலுவலகங்களுக்கு பல்வேறு அலுவல் நிமித்தமாக வந்த பொதுமக்கள் பணிகள் எதுவும் நடக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இந்த போராட்டம் தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறும்போது, “குமரி மாவட்டத்தில் பணியாற்றும் மொத்தம் உள்ள 520 பணியாளர்களில் 455 பேர் உள்ளிருப்பு போராட்டத்தில் பங்கேற்றனர். 65 பேர் ‘ஆப்சென்ட்‘ ஆகியுள்ளனர். பணிக்கு வந்தவர்களில் 100–க்கு 100 சதவீதம் பேர் உள்ளிருப்பு போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்“ என்றனர்.

மேலும் செய்திகள்