பள்ளி பஸ்சில் இருந்து தவறி விழுந்து இறந்த மாணவியின் உடலை வாங்க மறுத்து பெற்றோர்– உறவினர்கள் சாலை மறியல்

பள்ளி பஸ்சில் இருந்து தவறி விழுந்து பலியான மாணவியின் உடலை வாங்க மறுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் துறையூரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2017-12-02 22:30 GMT

துறையூர்,

திருச்சி மாவட்டம் துறையூரையடுத்த ஒட்டம்பட்டி புதூரை சேர்ந்தவர் கேசவன். லாரி டிரைவர். இவருடைய மகள் கனிஷ்கா(வயது 8). இவர் துறையூரில் உள்ள ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். இவர் பள்ளி பஸ்சில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். அதேபோல் நேற்று முன்தினம் பள்ளி முடிந்ததும் அவர் பள்ளி பஸ்சில் வந்தார்.

அப்போது பெருமாள்பாளையம்– ஒட்டம்பட்டி புதூர் நடுவே ஒரு திருப்பத்தில் பஸ் திரும்பியபோது டிரைவரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த கனிஷ்கா எதிர்பாராதவிதமாக தடுமாறி முன்படிக்கட்டின் வழியாக கதவு திறக்கப்பட்டு கீழே விழுந்ததில், மாணவியின் தலையின் மீது பஸ்சின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் பலத்த காயமடைந்த கனிஷ்கா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த துறையூர் போலீசார், கனிஷ்காவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய பள்ளி பஸ் டிரைவர் கோவிந்தபுரத்தை சேர்ந்த முத்துகணேசனை(36) கைது செய்தனர்.

இந்நிலையில் மாணவி கனிஷ்கா பஸ்சில் இருந்து தவறி விழுந்து பலியானதற்கு பஸ் டிரைவரின் கவனக்குறைவும், பள்ளியின் நிர்வாக சீர்கேடும்தான் காரணம் என்று அம்மாணவியின் பெற்றோரும், உறவினர்களும் பள்ளியின் தாளாளரையும், தலைமை ஆசிரியரையும் உடனடியாக கைது செய்யும்வரை மாணவியின் உடலை வாங்கமாட்டோம் என்று கூறி நேற்று துறையூர் பாலக்கரையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பஸ் மாறியல் மதியம் 1 மணி முதல் 2.30 மணிக்கும் மேலாக நடைபெற்றது.

இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட குற்ற புலனாய்வு துறை போலீஸ் துணை சூப்பிரண்டு கோவிந்தராஜ், முசிறி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா, முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சித்ரா, சப்–இன்ஸ்பெக்டர் செல்வராஜ், துறையூர் தாசில்தார் சந்திரகுமார் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பள்ளி நிர்வாகத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில் மறியலை கைவிட்டு மாணவியின் உடலை பெற்று சென்றனர். தனது ஒரே மகளை விபத்தில் பறிகொடுத்த பெற்றோர் சாலையின் நடுவில் விழுந்து கதறி அழுதது பார்த்தவர்களையும் கண் கலங்க செய்தது. திடீர் சாலை மறியலால் துறையூர்– திருச்சி சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்