பாந்திராவில் காங்கிரஸ் அலுவலக பெயர் பலகையில் கருப்புமை பூச்சு

பாந்திராவில் காங்கிரஸ் கட்சியின் அலுவலக பெயர் பலகையில் கருப்பு மையை பூசிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update:2017-12-03 03:55 IST

மும்பை,

மும்பை எல்பின்ஸ்டன் ரோடு ரெயில்நிலைய நடைமேம்பாலத்தில் கடந்த செப்டம்பர் மாதம் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 23 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கு நடைபாதை வியாபாரிகளே முக்கிய காரணம் என நவநிர்மாண் சேனா கட்சி (எம்.என்.எஸ்.) கூறியது. மேலும் அவர்கள் பல பகுதிகளில் நடைபாதை வியாபாரிகளை அடித்து விரட்டி அவர்களின் பொருட்களை சூறையாடினர். இதையடுத்து காங்கிரஸ் கட்சி நடைபாதை வியாபாரிகளுக்கு ஆதரவாக களம்இறங்கியது.

இதனால் காங்கிரஸ், நவநிர்மாண் சேனா கட்சி தொண்டர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் சி.எஸ்.எம்.டி. ஆசாத் மைதானம் அருகே உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் நவநிர்மாண் சேனா கட்சியினரால் சூறையாடப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் 8 பேரை கைது செய்துள்ளனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று பாந்திரா கேர்வாடி பகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலக பெயர் பலகையில் கருப்பு மை பூசப்பட்டுள்ளது. இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நள்ளிரவு நேரத்தில் வந்த மர்மஆசாமிகள் பெயர் பலகையில் கருப்பு மையை பூசிவிட்டு சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்ட நிலையில் நேற்றும் அக்கட்சியின் பெயர் பலகையில் கருப்பு மை பூசிய சம்பவத்தால் மும்பையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்