திருப்பூர் காதர்பேட்டை பகுதியில் உள்ள நைஜீரியர்களிடம் ஆவணங்கள் குறித்து போலீசார் விசாரணை

திருப்பூர் காதர்பேட்டை பகுதியில் உள்ள நைஜீரியர்களிடம் போதிய ஆவணங்கள் இருக்கிறதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2017-12-17 22:15 GMT
திருப்பூர்,

திருப்பூருக்குட்பட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நைஜீரியர்கள் தங்கி இருந்து பனியன் தொழில் செய்து வருகின்றனர். பலர் பனியன் தயாரிப்பு நிறுவனங்கள் வைத்து நடத்தி வருகின்றனர். அவர்கள் இங்கு தயாரிக்கப்படும் பனியன்களை தங்கள் சொந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தும் வருகின்றனர். இதன்படி கடந்த ஒருசில வருடங்களுக்கு முன்பு வரை நூற்றுக்கணக்கான எண்ணிக்கையிலேயே நைஜீரியர்கள் தங்கியிருந்தனர்.

ஆனால் தற்போது அவர்கள் எண்ணிக்கை அதிகரித்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட நைஜீரியர்கள் திருப்பூருக்குட்பட்ட பகுதிகளில் வருடக்கணக்கில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் வியாபாரம் மற்றும் ஏற்றுமதியில் ஈடுபடும் நைஜீரியர்கள், திருப்பூரில் உள்ள உள்ளூர் வாசிகளின் ஆதரவுடன் பல்வேறு பிரச்சினைகளில் ஈடுபட்டு வருவதாகவும், தொடர்ந்து பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக நடந்து வருவதாகவும் புகார்கள் வந்தன.

இதை தொடர்ந்து போலீசார் காதர்பேட்டை பகுதிகளில் உள்ள நைஜீரியர்களிடம் கடந்த ஒருசில நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர்கள் நடத்தி வரும் பனியன் குடோன்கள், நிறுவனங்கள் உள்ளிட்டவைகளிலும் ஆய்வு செய்து வருகின்றனர். யாராவது விசா காலம் முடிந்தும் திருப்பூரிலேயே தங்கியிருக்கிறார்களா? அல்லது முறைகேடான தொழிலில் யாராவது ஈடுபடுகின்றனரா? என்பது குறித்தும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இந்தியா வந்ததற்கான உரிய ஆவணங்களையும் உடனடியாக சமர்ப்பிக்கும் படியும் நைஜீரியர்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். நாளுக்கு நாள் நைஜீரியர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும், இதனால் உடனடியாக இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, இவர்களின் வரவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் உள்ளூர்வாசிகளும், வியாபாரிகளும் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்றும் அந்த பகுதியில் உள்ள பனியன் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும் செய்திகள்