ஆர்.கே.நகர். இடைத்தேர்தல் மூலம் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மூலம் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும் என அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச்செயலாளர் கூறினார்.

Update: 2017-12-17 22:15 GMT
மதுரை,

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் இளைஞரணி சார்பில் மதுரை பெத்தானியாபுரத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இளைஞரணி மாநில தலைவர் சுரேஷ்தேவன் தலைமை தாங்கினார். அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைவர் முத்துராமலிங்கம், அகில இந்திய துணை தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி.வி.கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் அகில இந்திய பொதுச்செயலாளர் பிஸ்வாஸ் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும்போது, நேதாஜியின் பெருமைகளை இளைஞர்கள் அனைவரும் அறிய வேண்டும். அப்போது தான் இளைஞர்களுக்கு வீரமும், சமூக சிந்தனையும் வரும். நேதாஜியின் வாழ்க்கை வரலாற்றை அனைவரும் அறிந்து வைத்திருக்க வேண்டும். அப்போது தான் நாட்டின் மீது நமக்கும் பற்று ஏற்படும்.

தமிழகத்தில் ஆளும் கட்சி மக்களுக்கு ஏதுவும் செய்யவில்லை. எனவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மூலம் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும் என்றார்.

முன்னாள் எம்.எல்.ஏ. பி.வி.கதிரவன் பேசும்போது, ஆர்.கே.நகர். இடைத்தேர்தலில் பணம் வெற்றியை தேடி தரும் என சிலர் நினைக்கின்றனர். ஆனால் ஒருபோதும் பணம் வெற்றியை தேடி தராது. நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றபோது மீனவர்கள் பிரச்சினை தீர்க்கப்படும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என உறுதியளித்தார். ஆனால் அவர் கூறியதுபோல் இதுவரை நடக்கவில்லை. மக்களை ஏமாற்றும் அரசாக மத்திய அரசு செயல்படுகிறது. மோடி என்ன சொல்கிறாரோ அதுதான் தமிழகத்தில் நடக்கும். பா.ஜ.க. அரசு ஒருபோதும் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்றார்.

கூட்டத்தில் தேசிய செயலாளர் தேவராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்