புளியங்குடி அருகே பரிதாபம் குளத்தில் தவறி விழுந்து சிறுமி சாவு

புளியங்குடி அருகே குளத்தில் தவறி விழுந்து சிறுமி பரிதாபமாக இறந்தாள்.;

Update:2017-12-18 04:15 IST
புளியங்குடி,

நெல்லை மாவட்டம் செங்கோட்டை பண்பொழி அருகே உள்ள கட்டளைகுடியிருப்பை சேர்ந்தவர் காளிராஜ். விவசாயி. இவருடைய மனைவி முத்துதுரைச்சி. இவர்களுடைய மகள் கோபிகா என்ற பூங்கோதை (வயது 7). இவள் அங்குள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள்.

கடந்த 14-ந்தேதி புளியங்குடி அருகே நெல்கட்டும்செவலில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில், காளிராஜ் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். திருமணம் முடிந்த பிறகு, சிறுமி கோபிகா மட்டும் அங்கேயே தங்கியிருந்து வந்தாள்.

நேற்று முன்தினம் கோபிகாவின் பாட்டி வெள்ளத்தாய், கோபிகா உள்பட பேரக்குழந்தைகளை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள குளத்துக்கு குளிக்க சென்றார். அப்போது கோபிகா குளக்கரையில் விளையாடிக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது கோபிகாவை காணவில்லை. இதனால் அவள் வீட்டுக்கு சென்று இருக்கலாம் என்று கருதி வெள்ளத்தாய் வீட்டுக்கு சென்று பார்த்தார். ஆனால் அங்கு கோபிகா வரவில்லை என்று தெரியவந்தது.

இதுகுறித்து உடனடியாக புளியங்குடி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசாரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு படையினர் குளத்தில் இறங்கி, சிறுமியை தேடிப் பார்த்தனர். ஆனால் அவளை கண்டுபிடிக்க முடியவில்லை. இரவு நேரம் ஆகிவிட்டதால் சிறுமியை தேடும் பணி நிறுத்தப்பட்டது.

2-வது நாளாக நேற்று குளத்தில் சிறுமியை தேடும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டனர். அப்போது குளத்தில் சிறுமி கோபிகாவின் உடல் மிதந்தது. அவளது உடலை பொதுமக்கள் மீட்டனர். அவளது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த புளியங்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குளத்தின் அருகில் விளையாடி கொண்டு இருந்தபோது சிறுமி தவறி குளத்தில் விழுந்து இறந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்