கடலூரில், அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடலூரில் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

Update: 2017-12-17 22:57 GMT
கடலூர்,

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு(ஜாக்டோ-ஜியோ கிராப்ட்) சார்பில் கடலூர் மாவட்ட பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவரும், ஒருங்கிணைப்பாளருமான ஆனந்ததுரை தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகபாண்டியன் வரவேற்றார்.

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அன்பரசன், குரூப்-2 நேரடி நியமன அலுவலர்கள் சங்க மாநில துணை தலைவர் சிவா, அரசு அலுவலக உதவியாளர்கள் மாவட்ட தலைவர் பச்சையப்பன், அரசு வாகன ஓட்டுனர் சங்க மாவட்ட தலைவர் ஆதிநாராயணன், கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் மற்றும் காப்பாளர் நலசங்க மாநில தலைவர் பாக்கியராஜ், அரசு அலுவலர் ஒன்றிய மாநில துணை தலைவர் அனந்த கிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்கள்.

1.4.2003 முதல் பணி நியமனம் செய்யப்பட்ட அனைத்து அரசு அலுவலர்கள்-ஆசிரியர்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அறவே ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 6-வது ஊதியக்குழுவில் ஊதிய பாதிப்புக்குள்ளான இடைநிலை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், அமைச்சுப்பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், தலைமை செயலக உதவிப் பிரிவு அலுவலர்கள் என பாதிக்கப்பட்ட ஏனைய பிரிவினருக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதிய மாற்றம் வேண்டும், 6-வது ஊதியக்குழுவில் ஊதிய முரண்பாடுகள் களையப்பட்ட பின்னர் திருத்திய ஊதியமாற்றம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்க மாநில தலைவர் தீனதயாளன், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் அறிவழகன், ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் அருணாசலம், ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் அருள்சங்கு, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் கரிகாலன் மற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். முடிவில் அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட பொருளாளர் அம்பலவாணன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்