ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு தீக்குளிக்க முயன்ற தொழிலாளி

ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு தொழிலாளி தீக்குளிக்க முயன்றார்.

Update: 2017-12-18 22:45 GMT

ஈரோடு,

ஈரோடு கஸ்பாபேட்டை கள்ளகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 35). தொழிலாளி. இவருடைய மனைவி திவ்யா (22). இவர்களுக்கு ஹாசினி (5) என்கிற மகள் உள்ளாள். சங்கர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்து இருந்தார். இந்தநிலையில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு கொடுப்பதற்காக சங்கர் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் அதிகாரிகளிடம் வீட்டுமனை பட்டா கேட்டு கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு கூட்டரங்கில் இருந்து வெளியே வந்தார்.

அதன்பின்னர் அவர் கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே தனது பையில் வைத்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை வெளியே எடுத்தார். அப்போது தீக்குளிப்பதற்காக மண்எண்ணெயை தனது உடலில் வேகமாக ஊற்றிக்கொண்டார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று அவரிடம் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை கைப்பற்றினார்கள்.

தீக்குளிக்க முயன்ற சங்கரை போலீசார் சூரம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொழிலாளி ஒருவர் உடலில் மண்எண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தையொட்டி ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நுழைவு வாயிலில் வாகனங்கள் வெளியே செல்லும் கதவு அடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே செல்லும் வழியாக மட்டுமே கலெக்டர் அலுவலத்திற்குள் நுழைய பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். அங்கு போலீசார் நின்று கொண்டு மனு கொடுக்க வந்த பொதுமக்களை தீவிரமாக சோதனையிட்டு கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுப்பினர். இதேபோல் இருசக்கர வாகனங்கள், கார்களில் வந்தவர்களையும் போலீசார் சோதனையிட்ட பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர். கடுமையான பாதுகாப்பையும் மீறி தீக்குளிப்பதற்காக மண்எண்ணெய் பாட்டிலை கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் சங்கர் எடுத்து சென்றது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்