‘ஒகி’ புயலால் இறந்த “விவசாயிகளின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும்” கலெக்டரிடம் மனு

‘ஒகி‘ புயலால் இறந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என்று குமரி கலெக்டரிடம் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் மனு கொடுத்தார்.

Update: 2017-12-18 22:45 GMT
நாகர்கோவில்,

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் தலைமையில் மாநில செயலாளர் ஆசைதம்பி, சிவகுமார், விஜய்மாரீஸ், ஆவரை அரசர், சக்திமுருகன், ரெஜிசிங் உள்பட பலர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டர் சஜ்ஜன்சிங் சவானிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

‘ஒகி‘ புயல் குமரி மாவட்டத்தை புரட்டி போட்டுள்ளது. புயலால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். புயலில் சிக்கி மரணம் அடைந்த விவசாயிகள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். புயலால் அழிந்த ரப்பர் மரம் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரமும், வாழை ஒன்றுக்கு ரூ.500-ம் வழங்குதல் அவசியம். விவசாய பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

என்.ஆர்.தனபாலன் பேட்டி

அதன் பிறகு என்.ஆர்.தனபாலன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- ஒகி புயலில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க பிரதமர் நரேந்திரமோடி நாளை (அதாவது இன்று) குமரி மாவட்டம் வருகிறார். பிரதமர் நரேந்திரமோடி மக்களை சந்திப்பதோடு மட்டும் அல்லாமல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள குமரி மாவட்டத்துக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 100 கோடி ரூபாய்க்கும் மேல் பணப்பட்டுவாடா செய்யப்பட்டு உள்ளது. பணப்பட்டுவாடாவை தடுக்க போலீஸ், துணை ராணுவம் மூலம் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தேர்தல் கமிஷன் கூறுகிறது. ஆனால் ஆர்.கே.நகரில் போலீஸ் வாகனங்கள் மூலமும், ஆம்புலன்சு மூலமும் பணம் கொண்டு செல்லப்பட்டு பட்டுவாடா செய்யப்படுகிறது. பணப்பட்டுவாடாவை தடுக்க சட்டங்களை கடுமையாக்க வேண்டும். பணம் கொடுக்கும் கட்சியின் வேட்பாளர் தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும். திருச்செந்தூரில் பல ஆண்டுகளாக கடை நடத்தி வருபவர்களை உடனே காலி செய்யும்படி கட்டாயப்படுத்துவதாக கூறப்படுகிறது. கடைகளை காலிசெய்ய வேண்டும் என்றால் கடை நடத்துவதற்கு மாற்று இடம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்