ரூ.1½ லட்சம் கடனுக்காக வீடு அபகரிப்பு நாமக்கல் கலெக்டரிடம் பெண் புகார்

ரூ.1½ லட்சம் கடனுக்காக வீட்டை அபகரித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண், நாமக்கல் கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

Update: 2017-12-18 22:45 GMT
நாமக்கல்,

குமாரபாளையம் அருகே உள்ள ஓலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கண்ணையன். இவரது மனைவி ஜோதிலட்சுமி. இவர் நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது :-

நான் விசைத்தறி கூடம் ஒன்றில் கூலிவேலை செய்து வருகிறேன். எனது கணவருக்கு கடந்த 2013-ம் ஆண்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. எனவே நாங்கள் சடையம்பாளையம் மற்றும் ஓலப்பாளையத்தை சேர்ந்த 2 பேரிடம் ரூ.1½ லட்சம் மருத்துவ செலவுக்காக கடனாக பெற்றோம்.

கடந்த செப்டம்பர் மாதம் வரை முறையாக வட்டி செலுத்தி வந்த நாங்கள், அசல் தொகை ரூ.1½ லட்சம் மற்றும் 2 மாத வட்டி ரூ.9 ஆயிரம் சேர்த்து மொத்தம் ரூ.1 லட்சத்து 59 ஆயிரம் ஏற்பாடு செய்து கொண்டு, நாங்கள் ஏற்கனவே கொடுத்த ஒப்பந்த பத்திரத்தை ரத்து செய்ய அழைத்தோம்.

ஆனால் அவர்கள் சாக்குபோக்கு சொல்லி காலம் தாழ்த்தியதால் சந்தேகம் அடைந்து வில்லங்க சான்று எடுத்து பார்த்தோம். அப்போது அவர்கள் எங்களை ஏமாற்றி நாங்கள் வசிக்கும் வீட்டை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மோசடி செய்து இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக அவர்களிடம் கேட்டபோது, எங்களுக்கு கொலைமிரட்டல் விடுத்தனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்கள் வீட்டை மீட்டு தரவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தார். 

மேலும் செய்திகள்