குளிக்க சென்றபோது பரிதாபம் குட்டையில் மூழ்கி 4 மாணவர்கள் பலி

மேட்டூரில் குளிக்க சென்றபோது குட்டையில் மூழ்கி 4 மாணவர்கள் பலியானார்கள். இதில் உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளது.

Update: 2017-12-18 23:15 GMT
மேட்டூர்,

சேலம் மாவட்டம் மேட்டூர் கேம்ப் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. இவரது மகன் மணிகண்டன்(வயது17). பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த சில மாதங்களாக இவர் பள்ளிக்கு செல்லவில்லை. அதே பகுதியை சேர்ந்த தனபால் என்பவரின் மகன் ராஜா(11) 6-ம் வகுப்பும், மற்றொரு மகன் தமிழ்அழகன்(8) 4-ம் வகுப்பும் படித்து வந்தனர். அதே பகுதியை சேர்ந்த மணி என்பவரின் மகன் மோகன்ராஜ்(7) 2-ம் வகுப்பு படித்து வந்தான்.

நெருங்கிய நண்பர்களான மணிகண்டன், ராஜா, தமிழ்அழகன், மோகன்ராஜ் ஆகிய 4 பேரும் விடுமுறை நாட்களில் ஒன்றாக சேர்ந்து விளையாடுவார்கள். இவர்கள் சேலம் கேம்ப் பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர். நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே கிளம்பிய அவர்கள் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்திலும், உறவினர் வீடுகளிலும் தேடி பார்த்தனர். ஆனால் எங்கும் அவர்கள் கிடைக்கவில்லை.

இதனால் பொதுமக்கள் ஒன்று திரண்டு நேற்று காலை மேட்டூர் கேம்ப் பகுதியில் தேடினார்கள். மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் பாலத்தில் இருந்து தண்ணீர் வெளியேறும் பாதை மேட்டூர் சேலம் கேம்ப் பின்புறம் வழியாக சென்று மேட்டூர் அனல்மின் நிலையம் அருகே மீண்டும் காவிரி ஆற்றுடன் கலக்கிறது. இந்தநிலையில் நேற்று காலை சேலம் கேம்ப் பின்புறம் உபரிநீர் செல்லும் பாதையில் ஒரு குட்டையில் உள்ள தண்ணீரில் மாணவர்கள் மணிகண்டன், ராஜா, மோகன்ராஜ் ஆகிய 3 பேரும் பிணமாக மிதந்தனர். இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. இதனால் ஏராளமான பொதுமக்கள் அந்த பகுதியில் திரண்டனர்.

இதுபற்றி அறிந்ததும் கருமலைக்கூடல் போலீசார் மற்றும் மேட்டூர் தீயணைப்புபடை வீரர்கள் விரைந்து சென்று குட்டையில் இருந்து 3பேரின் உடல்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது கரையில் நின்ற பெற்றோர்கள் தங்களுடைய மகன்களின் உடல்களை மடியில் தூக்கி வைத்து ‘ஓவென‘ கதறி அழுததை பார்க்க பரிதாபமாக இருந்தது. மேலும் அங்கு திரண்டு இருந்த உறவினர்களும் கதறி அழுதார்கள். தமிழ்அழகன் உடல் மட்டும் கிடைக்காமல் இருந்தது. இதைத்தொடர்ந்து தீயணைப்பு படைவீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் தண்ணீரில் மூழ்கி தேடி தமிழ்அழகனின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். குளிக்க சென்ற 4 பேருக்கும் நீச்சல் தெரியாததால் குட்டையின் ஆழமான பகுதிக்கு சென்ற அவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்து உள்ளது தெரியவந்தது. இதனால் ஊரே சோகமயமாக காணப்பட்டது.

இறந்த மணிகண்டன் பெற்றோருக்கு ஒரே மகன் ஆவார். வேறு பிள்ளைகள் கிடையாது. எனவே பெற்றோர் மணிகண்டனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது அனைவரின் கண்களையும் குளமாக்கியது. இறந்த ராஜா கைப்பந்து நன்றாக விளையாடுவான். அண்ணன், தம்பியான ராஜாவும், தமிழ்அழகனும் எப்போதும் சேர்ந்தே சுற்றுவார்கள். வெளியே எங்கு சென்றாலும் தம்பி தமிழ்அழகனை அழைத்து செல்ல வேண்டும் என்றும், தம்பியை தனியாக விட்டு விடக்கூடாது என்றும் பெற்றோர் கூறியிருந்தனர்.

எனவே ராஜா எங்கு சென்றாலும் தம்பி தமிழ்அழகனை உடன் அழைத்து செல்வான். அது போல் நேற்று முன்தினம் தம்பி தமிழ்அழகனை வீட்டில் தனியாக விட்டுவிடக்கூடாது, தன்னுடன் அழைத்து சென்றால் உற்சாகமாக விளையாடிக்கொண்டு இருப்பான் என கருதி ராஜா வெளியே குட்டையில் குளிக்க அழைத்து சென்று இருக்கிறான். இறந்த மற்றொரு சிறுவன் மோகன்ராஜ் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல வேண்டி மாலை அணிந்து இருந்தான். சபரிமலைக்கு போவதற்குள் அவனும் பலியாகி விட்டான்.

பின்னர் 4 மாணவர்களின் உடல்களையும் கருமலைக்கூடல் போலீசார் கைப்பற்றி மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரி வளாகத்திலும் ஏராளமான பொதுமக்கள் கூடி நின்று கதறி அழுதனர். இதனால் அந்த பகுதியே சோகமயமாக காணப்பட்டது. 

மேலும் செய்திகள்