செல்போன் தகராறில் 8-ம் வகுப்பு மாணவன் அடித்துக்கொலை சகமாணவன் வெறிச்செயல்

காட்பாடி அருகே செல்போன் வாங்கிய தகராறில் பள்ளி மாணவனை, சக மாணவனே அடித்துக்கொலை செய்துள்ளான். இதுதொடர்பாக மற்றொரு மாணவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2017-12-21 23:15 GMT
காட்பாடி,

பள்ளிகொண்டாவை அடுத்த வேப்பங்கால் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். கட்டிட தொழிலாளி. இவருடைய மகன் சந்தோஷ் (வயது 13). பொய்கை பிள்ளையார் குப்பத்தில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்துவந்தான். நேற்றுமுன்தினம் காலையில் வழக்கம்போல பள்ளிக்கு சென்ற மாணவன் சந்தோஷ் மாலையில் வீடுதிரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், சந்தோசுடன் படித்த அதேகிராமத்தை சேர்ந்த மற்றொரு மாணவனிடம் விசாரித்துள்ளனர். அப்போது தேர்வு முடிந்ததும் தங்களுடன் 8-ம் வகுப்பு படிக்கும் சோழமூர் ராமாவரம் பகுதியை சேர்ந்த ஒரு மாணவனுடன் இருவரும் சென்றதாகவும், லப்பை கிருஷ்ணாவரம் அருகே சென்றபோது அந்த மாணவன், சந்தோஷை கட்டையால் தாக்கியதாகவும், இதனால் தான் வீட்டுக்கு ஓடிவந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளான்.

அதைத்தொடர்ந்து அந்த மாணவன் கூறிய குறிப்பிட்ட இடத்திற்கு சென்று தேடிபார்த்தனர். அங்கும் சந்தோஷை காணவில்லை. இந்த நிலையில் நேற்று காலை அங்குள்ள ஒரு கால்வாயில் சந்தோஷ் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் லத்தேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு பிணமாக கிடந்த சந்தோஷின் உடலை பிரேதபரிசோதனைக்கு எடுத்துசெல்ல போலீசார் தயாரானார்கள். ஆனால் உடலை எடுக்கவிடாமல் சந்தோஷின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீசை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து காட்பாடி துணைபோலீஸ் சூப்பிரண்டு அலெக்ஸ், இன்ஸ்பெக்டர் அசோக்குமார் ஆகியோர் சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பிறகு சந்தோஷ் உடல் பிரேதபரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் செல்போன் தகராறில் இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்தது. கொலைசெய்யப்பட்ட சந்தோஷ் தனது செல்போனை, தன்னுடன் படிக்கும் சோழமூர் ராமாவரம் கிராமத்தை சேர்ந்த ஒரு மாணவனுக்கு விற்றுள்ளான். அதில் அந்த மாணவன் இன்னும் ரூ.500 கொடுக்கவேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த 500 ரூபாயை சந்தோஷ் அடிக்கடி கேட்டுள்ளான்.

இந்த நிலையில் நேற்று முன்தினமும் பணத்தை கேட்டுள்ளான். அதற்கு அந்த மாணவன் வீட்டுக்கு சென்று வாங்கித்தருவதாகக்கூறி சந்தோஷை அழைத்து சென்றுள்ளான். லப்பை கிருஷ்ணாவரம் அருகே சென்றபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு கிடந்த கட்டையால் சந்தோஷை, அந்த மாணவன் தாக்கி உள்ளான். இதில் சந்தோஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டான். உடனே அங்குள்ள கால்வாயில் உடலை போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டான்.

மேற்கண்ட தகவல் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதைத்தொடர்ந்து சந்தோஷை தாக்கிய மாணவனின் வீட்டுக்கு போலீசார் சென்றுள்ளனர். ஆனால் அங்கு மாணவன் உள்பட வீட்டில் உள்ள அனைவரும் தலைமறைவாகி விட்டனர்.

இதுகுறித்து லத்தேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோசுடன் படித்த வேப்பங்கால் கிராமத்தை சேர்ந்த மாணவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பெற்றோர் செல்போன் வாங்கி கொடுக்கக்கூடாது, அவர்கள் செல்போன்களை பயன்படுத்த அனுமதிக்ககூடாது என்று எவ்வளவுதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் சிலர் தங்கள் குழந்தைகளுக்கு செல்போன் வாங்கிக்கொடுத்து வருகிறார்கள். அது பல்வேறு பிரச்சினைகளை உருவாக்குகிறது என்பது தெரிந்தும் செல்போன் வாங்கிக்கொடுக்கின்றனர். தற்போது செல்போனால் 8-ம் வகுப்பு மாணவன் கொலைசெய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்