கல்லிடைக்குறிச்சி அருகே தோட்டத்தில் பதுக்கப்பட்டிருந்த 9 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்

கல்லிடைக்குறிச்சி அருகே, தனியார் தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 9 நட்சத்திர ஆமைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2017-12-22 21:30 GMT

அம்பை,

கல்லிடைக்குறிச்சி அருகே, தனியார் தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 9 நட்சத்திர ஆமைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தந்தை–மகனுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

நட்சத்திர ஆமைகள்

கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொட்டல் கிராமத்தில், கேரள மாநிலத்தை சேர்ந்த தனியார் ஒருவருக்கு சொந்தமான பண்ணைத் தோட்டம் உள்ளது. இங்கு தென்னை, மா உள்ளிட்ட பல்வேறு மரங்கள் உள்ளன. இந்தத் தோட்டத்தை திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாற்றின்கரையை சேர்ந்த ஜேம்ஸ் மற்றும் அவரது மகன் குஞ்சுமோன் ஆகியோர் பராமரித்து வருகின்றனர்.

வனத்துறையினர் சோதனை

இங்கு விலைமதிப்பற்ற நட்சத்திர ஆமைகளை வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக, பதுக்கி வைத்திருப்பதாக அம்பாசமுத்திரம் வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் துணை இயக்குநர் பார்கவதேஜா உத்தரவின் பேரில் அம்பாசமுத்திரம் வனச்சரகர் வெள்ளைத்துரை, வனவர்கள் முருகசாமி, மோகன், முருகேசன், வேட்டைத்தடுப்புக் காவலர்கள் முத்துகணேசன், கோமதிராஜன், முருகன், இசக்கிமுத்து உள்ளிட்டோர் விரைந்து சென்று அந்த தோட்டத்தில் சோதனை நடத்தினர்.

அபராதம்

அப்போது, தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பாதுகாக்கப்பட்ட வன உயிரின பட்டியலில் உள்ள அரியவகை 9 நட்சத்திர ஆமைகள் இருந்தன. அவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, ஜேம்ஸ், குஞ்சுமோன் ஆகியோருக்கு வனத்துறையினர், தலா 25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

மேலும் செய்திகள்