கிளி குஞ்சு விற்க வந்து பிடிபட்டவரை கைது செய்யாமல் இருக்க லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர் சிக்கினார்

கிளி குஞ்சு விற்பனை செய்ய வந்து பிடிபட்டவரை, கைது செய்யாமல் இருக்க லஞ்சம் வாங்கிய போலீஸ்காரரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-12-22 21:45 GMT

மும்பை,

கிளி குஞ்சு விற்பனை செய்ய வந்து பிடிபட்டவரை, கைது செய்யாமல் இருக்க லஞ்சம் வாங்கிய போலீஸ்காரரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

பறவைகள் விற்பனை

நவிமும்பையை சேர்ந்த ஒருவர் அரியவகை பறவைகளை விற்பனை செய்ய உள்ளதாக இணையதளத்தில் விளம்பரம் செய்திருந்தார். இதுபற்றி சி.பி.டி. பேலாப்பூர் வனக்குற்றத்தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அந்த நபரை பிடிக்க திட்டமிட்டனர். இணையதளத்தில் இருந்த அவரது எண்ணில் வாடிக்கையாளர் போல் தொடர்பு கொண்டு பேசினார்கள்.

இதை நம்பிய அந்த நபர் மும்பை முல்லுண்டு பகுதிக்கு பறவை வாங்க வரும்படி கூறினார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்றனர். அப்போது, அங்கு 2 கிளி குஞ்சுகளுடன் வந்த நபரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

போலீஸ்காரர் கைது

இந்தநிலையில், போலீஸ்காரர் சரத் ஜனார்தன்(வயது31) என்பவர் அந்த நபரை கைது செய்து நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு ரூ.65 ஆயிரம் லஞ்சம் கேட்டு உள்ளார். இதற்கு அவர் ரூ.45 ஆயிரம் தருவதாக கூறினார். பின்னர் லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து அவர்கள் கொடுத்த யோசனையின்படி, போலீஸ் நிலையம் சென்று முதல் கட்டமாக ரூ.15 ஆயிரம் கொண்டு வந்திருப்பதாக கூறி, அவரிடம் பணத்தை கொடுத்தார்.

அப்போது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சரத் ஜனார்தனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மேலும் செய்திகள்