512 வயதான சுறா!

உலகிலேயே தற்போது வரை வாழ்ந்து கொண்டிருக்கும் முதுகெலும்புள்ள உயிரினங்களில் அதிக ஆயுட் காலத்தை உடையது எனக் கருதப்படும் சுறா ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

Update: 2017-12-23 09:30 GMT
வட அட்லாண்டிக் கடல்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தச் சுறாவின் வயது 512 என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

ஜூலியஸ் நீல்சன் என்பவர், தனது பி.எச்டி. ஆய்வுப் படிப்புக்கான ஆய்வறிக்கையைச் சமர்ப்பிப்பதற்காக கிரீன்லாந்து சுறாக்கள் பற்றிய ஆய்வை மேற்கொண்டிருக்கிறார்.

அப்போதுதான் இந்த மிக மிக அதிக வயதான சுறா கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.

சுமார் 18 அடி நீளமானதாக இருக்கும் இச்சுறா 1505-ம் ஆண்டுவாக்கில் பிறந்திருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ‘ரேடியோகார்பன் டேட்டிங்’ முறையில் இதன் வயதை நிர்ணயித்திருக் கிறார்கள்.

இந்த வகை கிரீன்லாந்து சுறாக்களின் ஆயுள் ரொம்பவே கெட்டி. இவை நூறாண்டுகளைக் கடந்து வாழ்வதற்குப் பெயர் பெற்றவை. ஆண்டு ஒன்றுக்கு ஒரு செ.மீ. மட்டுமே இவை வளரும். சுமார் 150-வது வயதில்தான் இவை இனப்பெருக்கத்துக்கான முதிர்ச்சியை அடையும்.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் சுறாவை அதன் வயதை வைத்துப் பார்த்தால், ஷேக்ஸ்பியருக்கும் முன் பிறந்ததாகும்.

இதற்கு முன்னர் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நார்வே நாட்டின் ஆர்ட்டிக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விரிவுரையாளர் கிம் பிரபேல் மேற்கொண்ட ஆய்வின்போது, 400 வயதான கிரீன்லாந்து சுறா ஒன்றைக் கண்டுபிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு காலத்தில் வரைமுறையின்றி வேட்டையாடப்பட்ட கிரீன்லாந்து சுறாக்கள், அருகிவரும் உயிரினங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன.

தண்ணீருக்குள்ளேயே பல நூற்றாண்டுகளைக் கடக்கும் சுறாக்கள்!

மேலும் செய்திகள்