தலைமை செயலகம் எதிரே பராமரிப்பு இன்றி பொலிவை இழந்த பூங்கா
தலைமை செயலகம் எதிரே உள்ள பூங்கா பராமரிப்பு இன்றி பொலிவை இழந்து உள்ளது.;
சென்னை,
சென்னை காமராஜர் சாலையில் தமிழக அரசின் தலைமை செயலகம் உள்ளது. தமிழக அரசின் பெரும்பாலான துறைகளின் தலைமை அலுவலகங்கள் அங்குதான் செயல்பட்டுவருகின்றன. தலைமை செயலகத்தின் எதிரே சுமார் 8 ஏக்கருக்கும் அதிகமான இடவசதிகளை கொண்ட பூங்கா உள்ளது. இந்த பூங்காவினை தலைமை செயலகத்தின் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்கள் நடைபயிற்சி செல்வதற்கு பயன்படுத்தி வந்தனர்.
இதுதவிர தலைமை செயலகத்துக்கு பணி நிமித்தமாக வெளியூர்களில் இருந்து வருபவர்களும், காமராஜர் சாலை வழியாக வாகனங்களில் செல்பவர்களும் பூங்காவில் உள்ள மரத்தின் நிழலில் இளைப்பாறுவது வழக்கம். தலைமை செயலகத்தில் இட பற்றாக்குறை காரணமாக எதிரே உள்ள பூங்காவில் வாகனங்களை நிறுத்துவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு விதங்களில் பயன் அளிப்பதாக இந்த பூங்கா இருந்தது.
சமூக விரோதிகளின் கூடாரம்
ஆனால் தற்போது முறையான பராமரிப்பு இல்லாததால் பூங்கா பொலிவிழந்து காணப்படுகிறது. அங்கு இடுப்பு அளவுக்கு செடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. நடைபயிற்சி செல்லும் பாதையை ஆக்கிரமித்து செடி, கொடிகள் வளர்ந்து உள்ளது. இதனால் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகளால் அங்கு வருவதற்கே பயப்படுகின்றனர்.
மேலும் மின் விளக்குகளும், மின் இணைப்பு பெட்டிகளும் ஆங்காங்கே உடைந்து கிடக்கின்றன. இருக்கும் ஒரு சில மின் விளக்குகளும் சரியாக எரியாததால் இரவு 7 மணிக்கு மேல், பூங்கா கும்மிருட்டாக காட்சியளிக்கிறது.
இரவு நேரங்களில் காதல் ஜோடிகளுக்கு புகலிடமாகவும், சமூக விரோதிகளுக்கு கூடாரமாகவும் பூங்கா மாறிவிட்டது. இதுதவிர குடிமகன்கள் உல்லாசமாக மது அருந்துவதற்கான சொர்க்கபுரியாக இந்த இடம் திகழ்ந்து வருகிறது.
செயல் இழந்த நீருற்று
மது போதையின் உச்சத்தில் ஆசாமிகள் சிலர் பாட்டில்களை தூக்கி எறிந்து செல்கின்றனர். உடைந்த பாட்டில்களின் துண்டுகள் ஆங்காங்கே சிதறி கிடப்பதால் அவை நடைபயிற்சி செல்பவர்களின் கால்களை பதம் பார்க்கும் நிலை உள்ளது. இதேபோல பூங்காவில் உள்ள வண்ண செயற்கை நீருற்று எழில் சேர்க்கும் வகையில் கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
அந்த நீருற்று தற்போது செயல் இழந்து கிடக்கிறது. அருகாமையில் உள்ள ராணுவ குடியிருப்பில் வசித்து வருபவர்களும், தலைமை செயலகம், ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களும் ஓய்வு நேரங்களில் பொழுதை போக்குவதற்காக பூங்காவை பயன்படுத்தி வந்தனர். அவர்கள் உருமாறிப்போன பூங்காவின் பரிதாப நிலையை கண்டு கடுமையான மனவேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.
தமிழகத்துக்கு தலைகுனிவு
தலைமை செயலகத்துக்கு தினந்தோறும் வந்து செல்லும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் கடைக்கண் பார்வையில் இந்த அவல நிலை படாதது வேதனையாக உள்ளது. தலைமை செயலகத்தின் எதிரே உள்ள பூங்கா தமிழகத்தின் கம்பீரத்தையும், பெருமையையும் பறைசாற்றுவதாகவே எப்போதும் இருக்கவேண்டும். குத்துவிளக்கு போன்று சுடர்விட்டு எரியும் தமிழக அரசு தலைமை செயலகத்தின் அருகே உள்ள பூங்காவில் இருட்டு விழலாமா?
இது தமிழகத்துக்கே தலைகுனிவு அல்லவா? பூங்காவில் அனைத்து வசதிகளையும் வழக்கம்போல மேம்படுத்தி, சீரமைத்து இழந்த கவர்ச்சியை மீட்க வேண்டும் என்பதே அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பூங்காவை நடைபயிற்சிக்காக பயன்படுத்தி வந்தவர்களின் கோரிக்கையாக இருக்கிறது. இவர்களின் குரலுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செவிசாய்ப்பார்களா?