விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; பெண் தொழிலாளி கருகி சாவு

விருதுநகர் அருகே செங்குன்றாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று மாலை ஏற்பட்ட வெடி விபத்தில் 15 அறைகள் இடிந்து தரைமட்டமானது. பேரையூரைச் சேர்ந்த பெண் தொழிலாளி ஒருவர் உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-02-19 22:30 GMT
விருதுநகர்,

விருதுநகர் அருகே உள்ள செங்குன்றாபுரத்தில் திருத்தங்கலை சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. 48 அறைகள் கொண்ட இந்த ஆலையில் 50 பெண்கள் உள்பட 150 பேர் தினசரி வேலை பார்ப்பது வழக்கம். நேற்றும் இந்த பட்டாசு ஆலையில் வழக்கம் போல் பட்டாசு உற்பத்தி வேலை நடந்து கொண்டிருந்தது.

பட்டாசு ஆலையில் மருந்து நிரப்பும் அறையில் திடீரென ஏற்பட்ட உராய்வின் காரணமாக நேற்று மாலை வெடி விபத்து ஏற்பட்டது. பயங்கர சத்தத்துடன் வெடிகள் வெடித்தன. விபத்தில் மருந்து நிரப்பும் அறை உள்பட அடுத்தடுத்திருந்த 15 அறைகள் இடிந்து தரைமட்டமாயின. இந்த அறைகளில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளிகள் வெடிமருந்து வெடிக்கும் சத்தம் கேட்டவுடன் அவர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்த அறைகளில் இருந்து தப்பியோடினர்.

தகவலறிந்து ஆமத்தூர் போலீசாரும், விருதுநகர், சாத்தூர், சிவகாசி உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு படை வீரர்களும் வெடி விபத்து நடந்த ஆலைக்கு விரைந்து சென்று தீயை அணைத்ததுடன் மீட்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டனர். ஜே.சி.பி.எந்திரத்தின் மூலம் கட்டிட இடிபாடுகளை அகற்றி அதில் யாரேனும் தொழிலாளர்கள் சிக்கி இறந்துள்ளனரா என தேடும் பணி நடந்தது.

இதில் 40 வயது மதிக்கத்தக்க பெண் தொழிலாளி ஒருவர் கட்டிட இடிபாடுகளுக்கிடையே உடல் கருகி இறந்து கிடந்தார். அவரது உடலை தீயணைப்பு படையினர் மீட்டனர். உடல் முற்றிலுமாக கருகி இருந்ததால் அவரை உடனடியாக அடையாளம் காண முடியவில்லை. விசாரணைக்கு பின் உடல் கருகி இறந்த பெண் அந்த பட்டாசு ஆலையில் வேலை பார்த்த மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள ராவுத்தன்பட்டியைச் சேர்ந்த பாண்டி என்பவரது மனைவி லட்சுமி (வயது 40) என தெரியவந்தது. அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பட்டாசு ஆலை போர்மென் பிரபுவுக்கும்(50) பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது பற்றி ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டுள்ளனர். வெடி விபத்து நடந்த பட்டாசு ஆலை வளாகத்தில் தீயணைப்பு படையினர் தொடர்ந்து இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் செய்திகள்