பொதுமக்களின் குறைகளை அதிகாரிகள் உடனே நிவர்த்தி செய்ய வேண்டும்: கலெக்டர் லதா உத்தரவு

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பொதுமக்களின் குறைகளை உடனே நிவர்த்தி செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் லதா உத்தரவிட்டார்.

Update: 2018-02-19 22:00 GMT
சிவகங்கை,

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் லதா தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனைப் பட்டா, விபத்து நிவாரணம் கோருதல், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை கோருதல், வங்கிக் கடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் கேட்டல், குடும்ப அட்டை கோருதல், இலவச தையல் எந்திரம் வழங்க கோருவது உள்பட 276 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் லதா உத்தரவிட்டார்.

அதன் பின்னர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் லதா பேசியதாவது:- தமிழக முதல்-அமைச்சரின் தனி பிரிவில் இருந்து பெறப்படும் மனுக்கள் மற்றும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது விரைவில் தீர்வு பெற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதன் பயனாளிகளுக்கு தெரிவிக்க வேண்டும். பொதுமக்களின் குறைகளை அவ்வப்போது கேட்டு அதை அதிகாரிகள் உடனே நிவர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவி தொகைக்கான ஆணையை பயனாளி ஒரு நபருக்கும் மற்றும் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் மற்றொரு பயனாளிக்கு ரூ.58ஆயிரம் மதிப்பிலான மோட்டார் சைக்கிளை மாவட்ட கலெக்டர் லதா வழங்கினார். நிகழ்ச்சியில் அனைத்து துறை அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்