அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-02-19 22:15 GMT
கூத்தாநல்லூர்,

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகாவில் லெட்சுமாங்குடி, பொதக்குடி, பூதமங்கலம், வேளுக்குடி, சித்தனங்குடி, அதங்குடி, நாகங்குடி, வடபாதிமங்கலம், மரக்கடை உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற வசதியாக கூத்தாநல்லூரில் 1947-ம் ஆண்டு அரசு மருத்துவமனை கட்டப்பட்டது. கிராம பகுதி மக்களுக்கு பயனுள்ள மருத்துவமனையாக இயங்கி வரும் இந்த மருத்துவமனையின் கட்டிடங்கள் பழுதடைந்து காணப்படுகின்றன.

மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை அறை பழுதடைந்த நிலையில் உள்ளது. இந்த அறைக்கு பதிலாக புதிய கட்டிடம் வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அதேபோல உள்நோயாளி பிரிவில் உள்ள அறைகள் பராமரிக்கப்படவில்லை.

பொது சிகிச்சை பிரிவு பகுதியில் உள்ள கூரையில் இருந்து ஓடுகள் அடிக்கடி சரிந்து விழுவதால் அச்சத்துடன் மருத்துவமனைக்கு வர வேண்டி இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

கூத்தாநல்லூர் தாலுகா அந்தஸ்து பெற்ற பின்னரும் இங்கு உள்ள அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. மழை காலங்களில் மருத்துவமனையின் நிலை பரிதாபமாக உள்ளது. நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வருபவர்கள் மருத்துவமனையில் மேலும் சிரமத்தை சந்திக்கிறார்கள். போதுமான எண்ணிக்கையில் டாக்டர்களும் இல்லை.

24 மணிநேரமும் டாக்டர்கள் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. மருத்துவமனை கட்டப்பட்டு 71 ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனால் மருத்துவமனையின் வசதிகள் தரம் உயர்த்தப்படவில்லை. மருத்துவமனைக்கு புதிய கட்டிடத்தை கட்டவும், மருத்துவ வசதிகளை மேம்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு கிராம மக்கள் கூறினர். 

மேலும் செய்திகள்