சிவகங்கையில் 5 கடைகளில் கொள்ளை சம்பவம்: குற்றவாளிகள் பற்றிய முக்கிய தகவல் போலீசாருக்கு கிடைத்தது

சிவகங்கை நகரில் ஒரே நாளில் 5 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வழக்கில் அதில் ஈடுபட்ட குற்றவாளிகள் பற்றிய முக்கிய தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது.

Update: 2018-02-19 21:30 GMT
சிவகங்கை,

சிவகங்கை நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவு நேரத்தில் ஒரே நாளில் 5 கடைகளின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.

இதில் சிவகங்கை வாரச்சந்தை ரோட்டில் உள்ள 2 அரிசி கடைகளின் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் ஒரு கடையில் இருந்த ரொக்கம் ரூ.20ஆயிரம் மற்றும் அதன் அருகே இருந்த மற்றொரு கடையில் ரூ.12 ஆயிரத்து 500-ஐயும் கொள்ளையடித்தனர். இதைத் தொடர்ந்து பஸ் நிலையம் அருகே உள்ள மோட்டார் உதிரி பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் பூட்டை உடைத்து ரூ.82ஆயிரத்தை கொள்ளையடித்தனர்.

இதேபோல் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பால் விற்பனை கடையில் ரூ.1,500 மற்றும் வடக்கு ராஜ வீதியில் உள்ள ஒரு எலக்ட்ரானிக் பொருள் விற்பனை கடையில் ரூ.1,500-ஐ திருடிச் சென்றுவிட்டனர். அடுத்தடுத்து 5 இடங்களில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில் சிவங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு மங்களேஸ்வரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் மோகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், கருப்பசாமி ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் பற்றி முக்கிய தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. எனவே சிவகங்கை நகரில் ஒரே நாளில் 5 இடங்களில் கொள்ளையடித்த குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்று போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்