சிறுத்தைப்புலியை வெட்டிக் கொன்ற விவசாயி மீது வழக்கு

கிருஷ்ணகிரி அருகே சிறுத்தைப்புலியை வெட்டிக் கொன்ற விவசாயி மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2018-02-19 21:45 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜகடை அருகே மேலுகொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 62). விவசாயி. இவர் தனது நிலத்தில் கறவை மாடுகளை கட்டி வைத்திருந்தார். நேற்று முன்தினம் அங்கு வந்த சிறுத்தைப்புலி ஒன்று மாட்டை தாக்க பாய்ந்தது. அதை ராமமூர்த்தி கம்பை எடுத்து விரட்ட முயன்றார். அந்த நேரம் சிறுத்தைப்புலி ராமமூர்த்தி மீது பாய்ந்தது.

இதனால் ராமமூர்த்தி தான் வைத்திருந்த அரிவாளால் சிறுத்தைப்புலியை வெட்டிக் கொன்றார். இதில் காயம் அடைந்த ராமமூர்த்தி சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து வன கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான குழுவினர் சிறுத்தைப்புலியின் உடலை பிரேத பரிசோதனை செய்து, அதை புதைக்க கொண்டு சென்றனர்.

இந்த நிலையில் விவசாயியால் கொல்லப்பட்ட சிறுத்தையின் உடலை நீதிமன்றத்தில் காட்டி, கோர்ட்டு உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்க வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் மாஜிஸ்திரேட்டு (பொறுப்பு) ஜெயப்பிரகாஷ் முன்னிலையில், சிறுத்தைப்புலியின் உடல் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சிறுத்தையின் உடலை எரிக்க மாஜிஸ்திரேட்டு ஜெயப்பிரகாஷ் உத்தரவிட்டார்.

இதையடுத்து கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலக வளாகத்தில் மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி முன்னிலையில் சிறுத்தைப்புலியின் உடல் எரிக்கப்பட்டது. தற்போது சிறுத்தைப்புலியை வெட்டிக் கொன்ற விவசாயி ராமமூர்த்தி மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், வன விலங்குகளை தாக்குதல், வன விலங்குகளை கொல்லுதல் சட்டப்படி குற்றமாகும். அவர்கள் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்