பெரிய கண்மாயில் இருந்து சோத்தூருணிக்கு தண்ணீர் கொண்டு வரவேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

பெரிய கண்மாயில் இருந்து பாரதிநகர் பகுதியில் அமைந்துள்ள சோத்தூருணிக்கு தண்ணீர் கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update:2018-02-22 03:15 IST
பனைக்குளம்,

மண்டபம் யூனியன் பட்டணம்காத்தான் ஊராட்சிக்கு உட்பட்ட பாரதிநகர் பகுதியில் அமைந்துள்ளது சோத்தூருணி. மிகவும் பழமை வாய்ந்த இந்த ஊருணி அப்பகுதி மக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் தாகம் தீர்க்கும் தடாகமாக திகழ்ந்து வந்தது. பல ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்த ஊருணியில் முன்பெல்லாம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குளிக்கவும், துணி துவைக்கவும் பயன்படுத்தி வந்தனர். இதுதவிர புனித சடங்குகள் செய்வதற்கு இன்றளவும் இந்த ஊருணியைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்த இந்த ஊருணி கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப்போனதால் வறண்டு போய் காணப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் பெரிய கண்மாயை அடைந்தது. இந்த தண்ணீரை பயனுள்ளதாக பயன்படுத்தும் வகையில் ராமநாதபுரம் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஊருணிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. இதனால் ராமநாதபுரம் நகரில் மழை இல்லாதபோதும் பெரும்பாலான ஊருணிகள் நிரம்பி காணப்படுகின்றன. இதன் மூலம் அந்த பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து தண்ணீர் பிரச்சினை குறைய வாய்ப்பு ஏற்பட்டுஉள்ளது.

இதேபோல வறண்டு கிடக்கும் சோத்தூருணியில் தண்ணீர் நிரப்பினால் பாரதிநகர், நேருநகர், மகா சக்தி நகர், டி-பிளாக் மற்றும் சுற்றிலும் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் உயரும். இதன் மூலம் அப்பகுதியை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் பயன் அடைவார்கள். தற்போது அந்த பகுதிகளில் கிணறுகளில் தண்ணீர் அதல பாதாளத்துக்கு சென்று விட்டது.

இதன் காரணமாக பொதுமக்கள் லாரிகளில் கொண்டு வரப்படும் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். நகரில் மற்ற ஊருணிகளில் எல்லாம் நீர் நிறைந்திருப்பதை காணும் இப்பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கும் வைகை தண்ணீர் கொண்டு வரப்படமாட்டாதா என ஏக்கத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு பெரிய கண்மாயில் உள்ள வைகை தண்ணீரை சோத்தூருணிக்கு கொண்டு வந்து நிரப்ப வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்