வெளிநாட்டு கரன்சி தருவதாக ரூ.2 லட்சம் மோசடி

பான் கடைக்காரரிடம் குறைந்த விலையில் வெளிநாட்டு கரன்சி தருவதாக கூறி, ரூ.2 லட்சம் மோசடி செய்த 4 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.;

Update:2018-03-22 02:18 IST
மும்பை,

மும்பை கிர்காவை சேர்ந்தவர் சுரேந்திரா. இவர் ஹாஜிஅலி பகுதியில் பான் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவருக்கு அறிமுகமான அஸ்லாம் என்பவர் தன்னிடம் இருந்த சில வெளிநாட்டு கரன்சி நோட்டுகளை சுரேந்திராவிடம் காண்பித்தார். மேலும் அவர் தனது பாட்டியிடம் ஏராளமான கரன்சி நோட்டுகள் இருப்பதாகவும், குறைந்த விலைக்கு விற்பனை செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். இதனை வாங்க விருப்பம் தெரிவித்த சுரேந்திரா ரூ.2 லட்சம் தருவதாக ஒப்புக்கொண்டார்.

இதன்படி சுரேந்திரா குர்லா ரெயில் நிலையம் அருகே ரூ.2 லட்சத்துடன் நின்று கொண்டிருந்தார். அங்கு அஸ்லாம் மற்றும் 3 பேர் வந்தனர்.

பின்னர் அவர்கள் சுரேந்திராவிடம் இருந்த பணத்தை பெற்றுக்கொண்டு, தாங்கள் வைத்திருந்த வெளிநாட்டு கரன்சிகளை அவரிடம் ஒப்படைத்தனர். இதனை பெற்றுக்கொண்ட சுரேந்திரா வெளிநாட்டு கரன்சிகளை சோதனையிட்ட போது, போலீஸ் வந்தால் பிடிபட்டு விடுவோம். எனவே வீட்டிற்கு சென்று அவற்றை சரிபார்த்து கொள்ளும்படி தெரிவித்துவிட்டு 4 பேரும் அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டனர்.

இதனை நம்பிய சுரேந்திரா வீட்டிற்கு வந்து அவர்கள் வழங்கிய வெளிநாட்டு கரன்சியை சோதனை செய்த போது உள்ளே வெற்று காதிக நோட்டுகளை வைத்து ஏமாற்றியது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தார்டுதேவ் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அஸ்லாம் உள்பட 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்